சமையல் எரிவாயு கோரி கொழும்பு கொட்டாவ வீதி உள்ளிட்ட பல இடங்களில் வீதிளை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடரும் ஆர்ப்பாட்டம்:
உரிய முறையில் எரிவாயுவை பெற்றுத்தரக் கோரி பல பிரதேசங்களில் மக்களால் கடந்த சில வாரங்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் குறித்த பகுதியில் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுக்கி வைக்கப்பட்டுள்ள வெற்றுச் சிலிண்டர்கள்:
இதேவேளையில், பல நகரங்களில் நகரிலுள்ள சமையல் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்கள் முன்பாக, பல நாட்களாக நீண்ட வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு வெற்றுச் சிலிண்டர்களால் பாதசாரிகள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். நுவரெலியா ஹட்டன் நகரில் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில், அட்டன் நகரிலுள்ள ஹோட்டல்களின் உரிமையாளர்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்களை நடைபாதையில் நீண்ட தூரத்துக்கு வைத்து, ஒன்றுடன் ஒன்றை கயிற்றால் பிணைத்து கட்டி வைத்துள்ளனர்.
பாதசாரிகள் சிரமம்:
இதனால் நடைபாதையில் பயணிப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சந்தையில் விநியோகம்:
இந்த நிலையில், 50 ஆயிரம் எரிவாயு கொள்கலன்கள் இன்றைய தினம் சந்தையில் விநியோகிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 80 ஆயிரம் எரிவாயு கொள்கலன்கள் நாளைய தினம் சந்தையில் விநியோகிக்கப்படவுள்ளதாக, நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ நிறுவனம் தெரிவிப்பு:
இதன்படி, எதிர்வரும் நாட்களில் நாளொன்றுக்கு 80 ஆயிரம் எரிவாயு கொள்கலன்களை சந்தையில் விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Also Read: Srilanka Issue : ”ஆபிஸ் வராதீங்க..”அரசுப் பணியாளர்களுக்கு உத்தரவிட்ட பிரதமர்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்