அடுத்தாண்டு நவம்பர் 5ஆம் தேதி, அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்தாண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து, அடுத்த தேர்தலிலும் தான் போட்டியிட உள்ளதாக பைடன் அறிவித்துள்ளார். 


அமெரிக்க அதிபர் தேர்தல்:


பைடனை தவிர்த்து, ராபர்ட் கென்னடி, மரியான் வில்லியம்சன் ஆகியோரும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் தேர்வில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். வேட்பாளர் தேர்வில் போட்டியிட்டு வென்ற பிறகே, கட்சியின் சார்பில் அமெரிக்காவில் தேர்தலில் நிற்க முடியும்.


அதேபோல, முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் குடியரசு கட்சி சார்பில் அதிபருக்கான வேட்பாளர் தேர்வில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர்களை தவிர, இந்திய வம்சாவளியான நிக்கி ஹேலி, விவேக் ராமசாமி ஆகியோரும் வேட்பாளர் தேர்வில் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.


அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ள நிலையிலும், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, தொழிலதிபரான விவேக் ராமசாமிக்கு பல்வேறு தரப்பினரின் ஆதரவு பெருகி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட விவேக் ராமசாமியின் பெற்றோர்கள் கேரளாவில் வாழ்ந்து வந்துள்ளனர்.


விவேக் ராமசாமிக்கு பெருகும் ஆதரவு:


இப்படிப்பட்ட சூழலில், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளார். குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வில் விவேக் ராமசாமியின் முக்கிய போட்டியாளராக கருதப்படுபவர் புளோரிடா மாகாணத்தின் ஆளுநர் ரான் டிசாண்டிஸ்.


இருவரும் அடுத்த வாரம் நடைபெற உள்ள குடியரசு கட்சி அதிபர் வேட்பாளருக்கான விவாத போட்டியில் களம் இறங்க உள்ளனர். இந்த நிலையில், விவேக் ராமசாமிக்கு ஆதரவாக எலான் மஸ்க் ஒரே நாளில் இரண்டு முறை கருத்து தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


எலான் மஸ்க் கூறியது என்ன?


சமூக ஊடக தளமான எக்ஸில் (முன்னதாக ட்விட்டர் என அழைக்கப்பட்டது) விவேக் ராமசாமி தனது கொள்கைகளை பதவிட்டிருந்தார். கடவுள், பாலினம், காலநிலை மாற்றம், இனவெறி, குடியேற்றம் உள்பல பல்வேறு விவகாரங்களில் தனது நிலைபாடுகளை குறிப்பிட்டிருந்தார்.


இதற்கு பதில் அளித்து கருத்து பதிவிட்ட எலான் மஸ்க், "அவர் (விவேக் ராமசாமி) தனது கருத்தை தெளிவாக கூறுகிறார்" என பதிவிட்டுள்ளார்.


"கடவுள் என்பவர் உண்மையானவர்.


இரண்டு பாலினங்கள்தான் உள்ளன.


மனித வளர்ச்சிக்கு புதைபடிவ எரிபொருள்கள் தேவை.


தலைகீழ் இனவாதமே (இடஒதுக்கீடு உள்ளிட்ட கொள்கைகள்) இனவாதம்.


திறந்த எல்லை என்பது எல்லை அல்ல.


பெற்றோர்களே தங்கள் குழந்தைகளின் கல்வியை தீர்மானிக்கிறார்கள்.


தனிக்குடும்பம் முறையே மனிதகுலத்திற்குத் தெரிந்த மிகப் சிறந்த ஆட்சி முறை.


முதலாளித்துவம் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்கிறது.


அமெரிக்க அரசாங்கத்தின் மூன்று கிளைகளே உள்ளன. நான்கு அல்ல.


வரலாற்றில் அமெரிக்க அரசியலமைப்பே சுதந்திரத்திற்கான வலுவான உத்தரவாதமாகும்" என விவேக் ராமசாமி பதிவிட்டிருந்தார்.


நேர்காணல் ஒன்றில், அமெரிக்க அதிபர் தேர்தலில் நம்பிக்கைக்குரிய வேட்பாளராக விவேக் ராமசாமி இருப்பதாக தொலைக்காட்சி தொகுப்பாளரான டக்கர் கார்ல்சன் குறிப்பிட்டிருந்தார். இதே கருத்தை எலான் மஸ்க் ஆமோதித்தது குறிப்பிடத்தக்கது.