புகழ்பெற்ற தொழிலதிபர் எலன் மஸ்க் நடத்தி வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், முதல் முறையாக மனிதர்களை விண்வெளிக்குக் கொண்டு செல்லவுள்ளது. Inspiration4 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் பயணம் வரும் செப்டம்பர் 15 அன்று தொடங்கப்பட இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் Inspiration4 என்ற திட்டத்தை அறிவித்தது. இதன் தலைவராக தொழிலதிபர் ஜேரட் ஐசக்மேன் இருப்பார் எனவும், அவருடன் மூவர் பயணிப்பர் எனவும் கூறப்பட்டிருந்தது. 


Crew Dragon எனப் பெயரிடப்பட்டிருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலத்தைப் பயன்படுத்தி, ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கும் பாதையில் ஒவ்வொரு 90 நிமிடமும் பூமியை வலம் வரவுள்ளனர். 3 நாள்கள் பயணித்த பிறகு, Crew Dragon விண்கலம் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தின் கரையோரப் பகுதி ஒன்றில் தரையிறங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. Shift4 Payments என்ற கட்டண செயலாக்க நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ஜேரட் ஐசக்மேன் ஏற்கனவே பயிற்சி பெற்ற விமானி ஆவார். 



Inspiration4 பயணக் குழுவினர்


 


ஜேரட் ஐசக்மேன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலத்தை செயிண்ட் ஜூட் குழந்தைகள் ஆராய்ச்சி மருத்துவமனையின் வளர்ச்சிக்காக நிதி பெறுவதற்காக விலைகொடுத்து வாங்கியுள்ளார். செயிண்ட் ஜூட் மருத்துவமனைக்கு இரண்டு சீட்களை ஒதுக்கியுள்ளதோடு, 100 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் நிதியுதவியாக அளிக்கவுள்ளார் ஜேரட். அவருடன் ஹேலி அர்சினாக்ஸ், சியான் பிராக்டர், க்றிஸ் செம்ப்ரோஸ்கி ஆகியோர் பயணிக்கவுள்ளனர். 


ஹேலி அர்சினாக்ஸ் சிறுவயதில் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர். தற்போது அவர் செயிண்ட் ஜூட் மருத்துவமனையில் பணியாளராக இருக்கிறார். மற்ற இருவரும் சர்வதேச அளவில் போட்டிகளின் மூலம் விண்வெளிப் பயணத்திற்குத் தேர்வானவர்கள். நாசா விண்வெளி மையத்தின் கென்னடி ஸ்பேஸ் செண்டர்ல் 39A என்ற இடத்தில் இருந்து வரும் செப்டம்பர் 15 அன்று விண்ணுக்குப் பறக்கவுள்ளது Inspiration4. விண்ணில் செலுத்தப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்பு, விண்கலம் புறப்படும் துல்லிய நேரம் குறித்து முடிவு செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 



Crew Dragon விண்கலம்


 


முந்தைய விண்வெளிப் பயணங்களில் போது, சர்வதேச விண்வெளி நிலையத்தை Crew Dragon விண்கலங்கள் சென்றடைந்ததைப் போல, இந்த முறை சென்றடையாது எனக் கூறப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்கலத்தை நிறுத்தும் பகுதி தற்போது நீக்கப்பட்டு, அந்த இடத்தில் ஜன்னல் போன்ற பகுதி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஜன்னலின் வழியாக பூமியை மிக அழகாக ரசிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.  வரும் செப்டம்பர் 9 அன்று, விண்ணுக்குச் செல்லவுள்ள நால்வரும் கென்னடி ஸ்பேஸ் செண்டருக்கு வரவுள்ளனர். 


ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டின் இறுதியில் திட்டமிட்டுள்ள மற்றொரு விண்வெளிப் பயணத்தில் நான்கு தனியார் விண்வெளி வீரர்கள் ஒவ்வொருவரும் தலா 55 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தைக் கட்டணமாக அளித்து, 8 நாள்கள் பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவுள்ளனர்.