பிரபல கார் நிறுவனமான டெஸ்லாவின் தலைவர் எலோன் மஸ்க். இதுமட்டுமல்லாமல் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் மூலம் விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவைப்படும் ஏவுகணைகளை தயாரிக்கும் தொழிலிலும் இவர் ஈடுபட்டு வருகிறார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில் அடுத்தாண்டு நிலவிற்கு ஒரு விண்கலம் அனுப்பப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அந்நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. 


இந்நிலையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்து எலோன் மஸ்க் தற்போது அந்த இடத்திலிருந்து கீழே இறங்கியுள்ளார். இதற்கு காரணம் அவருடைய டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளின் சரிவு தான். கடந்த சில வாரங்களாக கார் நிறுவனங்களின் பங்குகள் சற்று குறைந்து வந்தன. அதிலும் குறிப்பாக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சீனாவில் ஏற்பட்ட தொழில் பின்னடைவால் ஒரே வாரத்தில் 2.2% அதிமாக குறைந்தது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் 160 பில்லியன் டாலர்களாக இருந்த இவரின் சொத்து மதிப்பு தற்போது  கடந்த ஜனவரியிலிருந்து 24 சதவிகிதம் குறைந்துள்ளது. 




இதன்மூலம் இரண்டாவது இடத்தை மஸ்க், மற்றொரு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்டிடம் பறி கொடுத்துள்ளார். அர்னால்ட்டின் சொத்து மதிப்பு கடந்த சில மாதங்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்தது. குறிப்பாக 42 பில்லியனாக இருந்த இவரது சொத்து மதிப்பு தற்போது 162 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இதனால் அவர் எலோன் மஸ்கை பின்னுக்கு தள்ளியுள்ளார். 


 


கடந்த ஜனவரியில் 49 வயதில் எலோன் மஸ்க் உலகின் பணக்காரர் என்ற பட்டத்தை பெற்றார். கடந்த ஆண்டு இவருடைய டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 750 சதவிகிதம் உயர்ந்தது. இதன்காரணமாக அவரின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்தது. எனினும் அவரின் சொத்து மதிப்பு இந்தாண்டு முதல் குறைய தொடங்கியுள்ளது. இந்தாண்டில் அமெரிக்காவில் அதிகளவு சொத்து மதிப்பு குறைந்த பணக்காரர்கள் பட்டியலில் எலோன் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். 




 


முன்னதாக கடந்த வாரம் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் நிலவில் டாக்காயின் என்ற கிரிப்டோ கரன்சியை கொண்டு செல்ல உள்ளோம் என்று எலோன் மஸ்க் அறிவித்திருந்தார். அத்துடன் தனது டெஸ்லா நிறுவனத்தில் பிட்காயின் மூலம் கார்கள் விற்கப்படாது என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். இதன் காரணமாக பிட்காயின் கிரிப்டோ கரன்சியின் மதிப்பு 15 சதவிகிதம் வரை குறைந்தது. இந்தச் சூழலில் தற்போது எலோன் மஸ்க் சொத்து மதிப்பும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது எலோன் மஸ்க் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது சொத்து மதிப்பை மீண்டும் உயர்த்த அவர் புதிய அறிவிப்பை எதையும் வெளியிடுவாரா என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.