திடீரென கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தெற்காசிய நாடுகள் குறிப்பாக இந்தியாவில் இருந்து வரும் பிரபலங்களுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் தடை விதித்துள்ளது மாலத்தீவு அரசு.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரத் தாண்டவம் ஆடிவரும் நிலையில், இங்குள்ள தொழிலதிபர்களும், பிரபலங்களும், பாலிவுட் நடிகர்களும் மாலத்தீவுக்குப் படையெடுக்கத் தொடங்கினர். தீவு தேசமான மாலத்தீவில் பல நூறு தங்கும் விடுதிகள் இருக்கின்றன. அவரவர் வசதிக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையில் பட்ஜெட் விடுதிகள் தொடங்கி, சொகுசு விடுதிகள் வரை உள்ளன. மாலத்தீவுகளின் மிகப்பெரிய வருமானமே சுற்றுலாத் துறை சார்ந்தது தான் என்பதால் அங்கு எப்போதுமே விருந்தினர்கள் அன்போடு வரவேற்கப்படுவதுண்டு.



 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பெரும்பாலான நாடுகள் சுற்றுலாவை ஊக்குவிக்காத நிலையிலும் மாலத்தீவு சுற்றுலாப் பயணிகளை அனுமதித்தது. எப்போதுமே இந்தியா தான் மாலத்தீவு சுற்றுலாவுக்கு முதல் விசிறி. மொத்த சுற்றுலா பயணிகளில் 21% இந்தியாவிலிருந்து செல்பவர்களாகவே இருப்பர். அதனைத் தொடர்ந்து ரஷ்யா, உக்ரைன், ஜெர்மனி, கசகஸ்தான் நாட்டவர் மாலத்தீவை நாடிவருவர்.

இந்நிலையில், இந்தியாவின் கொரோனா இரண்டாவது அலைக்குப் பயந்து இந்தியர்கள் பலர் மாலத்தீவில் பல நாட்கள் தங்க ஆரம்பித்துள்ளனர். சமீபகாலமாக மாலத்தீவிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்தது. இதனால், கடந்த மாதம் மாலத்தீவு அரசு சுற்றுலாப் பயணிகள், விடுதிகளில் மட்டும் தங்கிக் கொள்ளலாமே தவிர மக்கள்தொகை அதிகமுள்ள பகுதிகளுக்குச் செல்லக்கூடாது என உத்தரவு பிறப்பித்தது. அதன் பின்னரும் கூட இந்தியப் பயணிகளின் வரத்து குறையவில்லை.

 



 

இதற்கிடையில் மாலத்தீவில் கொரோனா பரவல் மேலும் அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 100 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென 1,500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், இந்திய விமானங்களுக்கு மாலத்தீவு தடை விதித்திருக்கிறது. மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அந்நாட்டு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

மாலத்தீவின் சுகாதார பாதுகாப்பு முகமை கடந்த 13ம் தேதி பதிவு செய்த டுவிட்டில், ‛தெற்காசிய நாடுகளில் இருந்து வருவோருக்கு தற்காலிகமாக சுற்றுலா விசா வழங்குவது நிறுத்திவைக்கப்படுகிறது,’ எனத் தெரிவித்திருந்தது. 

இதனால், இனி பெரும் பணக்காரர்களாக இருந்தாலும் பிரபலமாக இருந்தாலும் நிலைமையை இந்தியாவில் இருந்தே தான் சமாளிக்க வேண்டியிருக்கும். மாலத்தீவு செல்ல வேண்டும் என்கிற திட்டம் இருந்தால் அதை தற்காலிகமாக ஒத்திவைத்து விடுங்கள். ஏற்கனவே திட்டமிட்டிருந்தால் அதை திரும்ப பெறுவது எப்படி என அறிந்து அதை செயல்படுத்துங்கள். கிராமங்கள் வரை கொரோனா சென்று விட்டதாக நேற்று தான் இந்திய மாநிலங்களை மத்திய அரசு எச்சரித்தது. இன்று , தீவு வரை கொரோனா ஊடுருவியிருப்பதை பார்க்கும் போது, கொரோனா இல்லாத இடமில்லை போலும். நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.