எலான் மஸ்க், இவரைப் பற்றி ஏதாவது செய்தி அன்றாடம் வந்துவிடும். இவரே செய்திதான். அத்தனை தொழில்கள் இவரைச் சுற்றியுள்ளன. அந்த தொழில்கள் நிமித்தமாக செய்திகள் வராவிட்டால் இவரே செய்திக்கான கருப்பொருளை ஏதேனும் ட்வீட் மூலம் தந்துவிடுவார்.


எலான் மஸ்க் பின்னணி:


எலான் மஸ்க் தென் ஆப்பிரிக்காவில் பிறந்த கனேடிய, அமெரிக்க தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் முதலீட்டாளர். இவர் தற்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும், டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். அண்மையில் இவர் ட்விட்டர் சமூக வலைதளத்தை வாங்குவதாகவும் பின்னர் டீலை முறித்துக் கொள்வதாகவும் அறிவித்து பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தார். ட்விட்டர் டீல் தோல்வியடைந்தவுடன் இனி எலான் மஸ்க் தீனி போட மாட்டாரோ என ஊடகங்கள் நினைக்கக் கூடாது என்றே முளைத்தது போல் வந்துள்ளது பாலியல் புகார்.


செக்ஸ் புகார்:


அண்மையில் இவர் மீது ஒரு பாலியல் புகார் எழுந்துள்ளது. கூகுள் இணை நிறுவனரும் உலகின் 6-வது பெரிய பணக்காரருமானவர் செர்கெய் பிரின். அண்மையில் செர்ஜி பிரின் தனது மனைவி நிக்கோல் ஷனாஹனிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார். அது பரபரப்பு செய்தியாக மாறியது.


இந்நிலையில் தான் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஒருபடி மேலே சென்று இன்னும் பரபரப்பான தகவலை அச்செய்தியில் சேர்த்தது. அதாவது, கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவியுடன் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கிற்கு திருமணம் தாண்டிய தொடர்பு இருப்பதாக செய்தி வெளியிட்டது. இதனால் தான் செர்கெய் பிரின் விவாகரத்து கோரியதாகவும் குறிப்பிட்டது.


தி வால் ஸ்டீர்ட் ஜர்னல் வெளியிட்ட செய்தியில், "கடந்த 2021, டிசம்பர் மாதத்தில் எலான் மஸ்கிற்கும், நிகோலுக்கும் இடையே பாலியல் ரீதியான தொடர்பு ஏற்பட்டது. மியாமி நகரில் நடந்த ஆர்ட் பேஸல் நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலிருந்தும் பெரும் பணக்காரர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் தான் நிகோலிடம் மஸ்க் எல்லை மீறி நடந்து கொண்டார். இது செர்கெய் பிரினுக்கு தெரியவந்தது. இதனால்,செர்கெய் பிரினிடம் மஸ்க் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு தப்பித்தார் என்று அரசல்புரசல் தகவல்கள் உலாவருகின்றன" எனத் தெரிவித்திருக்கிறது.


அந்த மாதிரி உறவே இல்லை..


இந்தச் செய்திதான் இப்போது உலகம் முழுவதும் நெருப்பாய் பற்றி எரிகிறது. ஆனால் எலான் மஸ்க் இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறார். இது தொடர்பாக அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், இது முற்றிலுமாக அபத்தமானது. நானும் செர்கெய் பிரினும் நேற்று இரவு பார்ட்டியில் கலந்து கொண்டோம். நாங்கள் நண்பர்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் நிகோலை நான் இருமுறை மட்டுமே சந்தித்துள்ளேன். இரண்டு சந்திப்புகளின் போதும் எங்களுடன் நிறைய பேர் இருந்தனர். அந்த சந்திப்பில் எவ்வித ரொமான்ஸும் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.






இதற்கு நாங்கள் நம்பிவிட்டோம் என்ற தொனியில் ட்வீட் வர அதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க் நான் அந்த மாதிரி உறவில் இருந்தே வெகு காலமாகிறது என்று கூறியுள்ளார்.