ஹாலிவுட் ஹாரர் படங்களில் மிகவும் பிரபலமானது சக்கி என்னும் பொம்மை பேய். அந்த பொம்மை எல்லோரையும் கொலை செய்யும் திகில் கதைகள் காண்பவரை லைட்டாகக் கலங்கடிக்கும் அளவுக்குப் பிரபலம். உண்மையில், சார்லஸ் லீ என்கிற ’சக்கி’  ஒரு கற்பனையான பாத்திரம் மற்றும் சைல்ட்'ஸ் ப்ளே திரைப்பட சீரிஸில் முக்கியமாக இடம்பெறும் பாத்திரம்.


சக்கி என்பது சார்லஸ் லீ ரே என்ற சீரியல் கில்லரின் ஆன்மாவால் பிடிக்கப்பட்ட ஒரு பொம்மை. இந்த பாத்திரம் 1980களில் இருந்தே ஒரு திகில் பாத்திரமாக இருந்து வருகிறது.


சக்கியின் கதாப்பாத்திரம் பல வருடங்களாக பல திரைப்பட ரசிகர்களை பயமுறுத்தியிருக்கிறது. ஆனால் சமீபத்தில், அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள அமைதியான சுற்றுப்புறத்தில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளைச் சுற்றி நிஜமாகவே ஒரு சக்கியைப் பார்த்தத்தாக விநோதப் புகாரை எழுப்பினர்.




ஆனால் அப்படிச் சுற்றித் திரிந்தது கற்பனைக் கதாபாத்திரம் சக்கி அல்ல. அக்கம் பக்கத்தில் சுற்றித் திரிந்த மனித சக்கி உண்மையில் மாறுவேட உடையில் இருந்த 5 வயது சிறுவன்.


அலபாமாவின் பின்சனில் உள்ள குடியிருப்பு பகுதியின் சாலையோரத்தில் ஆளுயர சக்கி நிற்பதை காட்டும் புகைப்படம் தற்போது வைரலாகி நெட்டிசன்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.


உடையில் இருந்த குழந்தையின் பெயர் ஜாக்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் துணிச்சலாக சக்கி உடையில் வந்தது அண்டை வீட்டாருக்கு அச்சத்தை அளித்துள்ளது. ஆனால் அதே சமயம் பலர் அதை பார்த்து நகைச்சுவையாகச் சிரித்துள்ளனர்.


ஜாக்சனின் வைரலான அந்த புகைப்படத்தை கேந்திரா வால்டன் என்பவர் பகிர்ந்துள்ளார். அக்கம்பக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்த அவர் பய்ணிகள் இருக்கையில் அமர்ந்திருந்திருக்கிறார். 


அவரும் காரை ஓட்டி வந்த சக ஊழியரும் ஒரு கணம் காரை நிறுத்தியுள்ளனர். சக்கி உருவத்தில் இருந்த அந்த சிறுவன் சாலையோரம் இருந்ததே அதற்குக் காரணம். ’சக்கி’ கார் கடந்து செல்வதற்காக காத்திருந்தது அவர்களை உன்னிப்பாக கவனிப்பது போல இருந்ததாக அவர் கூறினார்.


கார் மெல்ல அந்த சிறுவனை நெருங்கியதும் அந்தச் சிறுவன் தனது முகமூடியைக் கழட்டியுள்ளான்.
கார் நெருங்கும் சமயத்தில்தான் வால்டன் அந்தச் சிறுவனை புகைப்படம் எடுத்துள்ளார். 
அந்த படத்தை தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ள வால்டன். ’பின்சனில் சக்கி உடையில் இருக்கும் சிறுவனின் அன்பான பெற்றோரே, உங்கள் குழந்தையைப் தயவு செய்து வீட்டுக்கு அழைத்துக்கொள்ளுங்கள். எனக்கு கிட்டத்தட்ட மாரடைப்பு வந்துவிட்டது" எனக் கூறியுள்ளார்.


இந்தப் புகைப்படம் தற்போது 1.04 லட்சத்துக்கும் அதிகமான ஷேர்களும், 50,000 ரியாக்ஷன்களும், 16,000க்கும் அதிகமான கருத்துக்களுடன் வைரலாகி வருகிறது. வால்டனைப் போலவே நெட்டிசன்களும் அதிர்ச்சியடைந்தனர் என்பதைச் சொல்லத் தேவையில்லை.