கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மெல்ல மீண்டு வந்துள்ள உலக நாடுகளுக்கு தற்போது குரங்கம்மை பாதிப்பு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனால், உலக நாடுகள் குரங்கம்மை தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலா நாடான தாய்லாந்திற்கு நைஜீரியா நாட்டில் இருந்து இளைஞர் ஒருவர் சுற்றுலா வந்துள்ளார். அவரது பெயர் ஓஸ்மாண்ட் சிகாசிரிம் ஜீரீம்.  சுற்றுலா விசா முடிந்த பிறகும் அந்த இளைஞர் தாய்லாந்திலேயே சட்டவிரோதமாக தங்கியிருந்தார். இந்த நிலையில், அவருக்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டது.




விசா காலம் முடிந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த அந்த நபர் போலீசாருக்கு பயந்தும், சிகிச்சைக்கு பயந்தும் தாய்லாந்தின் அண்டை நாடான கம்போடியாவிற்கு தப்பிச்சென்றார். குரங்கம்மையுடன் பாதிக்கப்பட்ட நபர் தாய்லாந்தில் இருந்து கம்போடியாவிற்கு தப்பிச்சென்றது இரு நாட்டு அரசுகளுக்கும் பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து, உடனே அந்த நபரை பிடிக்க இரு நாட்டு அரசும் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.


இந்த சூழலில், அவர் கம்போடியா நாட்டின் தலைநகரான ப்னோம்பென்னில் உள்ள விருந்தினர் மாளிகை ஒன்றில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் அவரை கைது செய்து சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவர் கம்போடியாவின் சாம்கர்மான் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை போலீசாரும், சுகாதாரத்துறையினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், அவரிடம் யார்? யாரிடம்? தொடர்பில் இருந்தீர்கள் என்றும் விசாரணை நடத்தப்பட்டது.




அவர் அளித்த தகவலின் பேரில், தாய்லாந்தில் உள்ள புக்கெட் பகுதியில் அவர் 2 கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார். அந்த இரு விடுதியிலும் சுமார் 150 நபர்கள் வரை இருந்துள்ளனர். இதனால், அவருடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறியும் பணியில் அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. மேலும், தாய்லாந்தில் ஒரு பெண்ணுடன் அவர் உடலுறவில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.


குரங்கம்மை நோய் பாதிப்புடன் தாய்லாந்தில் இருந்து கம்போடியாவிற்கு தப்பிச்சென்ற நைஜீரிய வாலிபரால் இரு நாட்டிலும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : ஒருவேளை உணவுக்கே திண்டாட்டம்: இலங்கையை விட்டு வெளியேறிய லட்சக்கணக்கான மக்கள்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண