ஜெர்மனியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த பேரணியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கண்ணில் பட்டவரை கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிராங்பேர்ட்டின் தெற்கே அமைந்துள்ள சுமார் 300,000 மக்கள் வசிக்கும் ஜெர்மன் நகரமான மன்ஹெய்மில் உள்ள Marktplatz என்ற சதுக்கத்தில் இந்த சம்பவம் நடந்தது. தாக்குதல் நடத்தியவர், ஆப்கானில் இருந்து வந்த புலம்பெயர் இஸ்லாமியர் என தெரியவந்துள்ளது. ஜெர்மனியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பேரணி நடைபெற்றுள்ளது. அப்போது இந்த நபர் அந்த கூட்டத்திற்குள் புகுந்து தன்னிடம் இருந்த கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தினார். பொது மக்கள் அவரை தடுக்க முயற்சி செய்த போதும் அவர் தொடர்ந்து தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாக தெரியவில்லை என்றும், பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
ஐரோப்பிய பாராளுமன்ற பிரச்சாரம் முடிவடையும் நேரத்தில் அதாவது இன்னும் ஒரு வார காலத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் சமயத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜெர்மனிக்கான தீவிர வலதுசாரி கட்சி இடம்பெயர்ந்தவர்கள் மூலம் ஏற்படும் அபாயத்தை முன்னிலைப்படுத்தி தனது பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.