மலேசியாவில் இருக்கும் தமிழ் அரசியல் தலைவர்களில் முக்கியமான ஒருவர் சாமி வேலு. இவர் 1936ஆம் ஆண்டு மலேசியாவின் இபோ நகரில் பிறந்தார். 1959ஆம் ஆண்டு முதல் இவர் மலேசிய அரசியலில் கால்பதித்தார். அப்போது முதல் பல்வேறு முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தார். குறிப்பாக இவர் 29 ஆண்டுகள் கேபினட் அமைச்சராக இருந்து வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை தூக்கத்தின் போது அவருடைய உயிர் பிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தத்துக் செரி.டி.சுப்ரமணியம் தகவல் தெரிவித்துள்ளார். அதில், “மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சாமி வேலு இன்று உயிரிழந்த செய்தியை கனத்த இதயத்துடன் தெரிவிக்கிறேன். அவர் மலேசிய நாட்டிற்கும் இந்திய சமூகத்தினருக்கு ஆற்றிய சேவை மிகவும் சிறப்பான ஒன்று” எனப் பதிவிட்டுள்ளார்.
இவரின் மரணத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.
1974ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை இவர் சுங்கை சிபுட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அத்துடன் 1979ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை இவர் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வந்தார். மேலும் இவர் 29 ஆண்டுகள் கேபினட் அமைச்சராக செயல்பட்டு வந்தார். இவர் தொழில்துறை, எரிசக்தி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்து வந்தார்.
இவருடைய மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மலேசியா நாட்டின் முன்னாள் கேபினட் அமைச்சர் சாமி வேலு மறைவு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவிலிருந்து பிரவேசி பாரதிய விருதை வென்ற முதல் நபர் இவர் தான். இவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பலரும் தங்களுடைய இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.