WHO Warning : 'எல் நினோ' எனும் காலநிலை மாற்ற காரணமாக கொரோனாவை விட கடுமையான வைரஸ் பாதிப்புகள் தாக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 


பருவ நிலை மாற்றத்தை தற்போது எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதனால் கடுமையான வறட்சி, தாங்க முடியாத வெப்பம், மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வண்ணமே உள்ளது. அதுமட்டுமின்றி நோய்களின் தாக்குமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், 'எல் நினோ’ காலநிலை மாற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது


எல் நினோ


எல் நினோ என்பது ஒரு காலநிலை நிகழ்வு. எல் நினோ நிகழ்வு சராசரியாக இரண்டு முதல் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை நிகழ்கிறது. இது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்ப மயமாதலுடன் தொடர்புடைய காலநிலை மாற்றம். எல் நினோ நிகழ்வில் வெப்பம் அலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். 


இதனால் கடுமையான வறட்சி, குறைந்த நேரத்தில் அதீத மழை, திடீர் புயல் என்பது போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த எல் நினோ நிகழ்வால் உலக நாடுகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கடுமையான தாக்கத்தில் சந்திக்கக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


WHO எச்சரிக்கை


இந்நிலையில், பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் 'எல் நினோ' பாதிப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பு இயக்குநர் டெட்ரோல் அதோனோம் கூறியதாவது, " 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் ’எல் நினோ’ வெப்பநிலை மேலும் அதிகரிக்கக் கூடும். அதிக வெப்பநிலையால் கொசுக்கள் மற்றும் சிற்றுண்ணிகளின் இனபெருக்கம் அதிகமாகும். இப்படி, எல் நினோ நிகழ்வுகளால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள உலக சுகாதார மையம் தயாராகி வருகிறது.


இந்த எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக டெங்கு, ஜிகா மற்றும் சிக்குன் குனியா  போன்ற வைரஸ் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், காலநிலை மாற்றம் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டு, பொருளாதார சிக்கலும் ஏற்படும்" என்றார். 


"கொரோனாவை விட கொடிய வைரஸ்”


மேலும், ”அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உலகத்தில் ஒரு சேர பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இது பொருளாதார சிக்கல்களையும் கொண்டு வரும். தற்போதுள்ள காலநிலை மாற்றத்தால் கொரோனாவை விட அதிக ஆபத்துக் கொண்ட கடுமையான வைரஸ் பாதிப்புகளும் ஏற்படலாம்" என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.


தென் அமெரிக்காவிலிருந்து ஆசியா வரையிலான பகுதிகள் ஏற்கனவே காலநிலை மாற்றத்தால் பல நோய்களுடன் போராடி வருகின்றது. இந்த ஆண்டு இதுவரை சுமார் 1,50,000 பேர் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரு நாடு அவசர கால நிலையை அறிவித்திருக்கிறது. நோய்த்தொற்றுகள் நாட்டின் சுகாதார அமைப்பில் பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன” என்று WHO எச்சரித்தது.