Modi Visit Egypt : பிரதமர் மோடி தனது எகிப்து பயணித்தின் 2வது நாளான இன்று 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அல்-ஹகிம் மசூதிக்கு சென்றார். 


எகிப்து சென்ற மோடி


அமெரிக்காவில் தனது மூன்று நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து இரண்டு நாட்கள் பயணமாக எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு நேற்று வந்தடைந்தார். மெய்ரோ விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, எகிப்து பிரதமர் முஸ்தபா உற்சாகமாக வரவேற்றார். 


பின்னர், தலைநகர் கெய்ரோ நகரில் உள்ள ஓட்டலில் அவருக்கு இந்தியா வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். திரைப்பட பாடல்களை பாடியும், கலாசார நிகழ்ச்சிகளை நடத்தியும் அவரை வரவேற்றனர். இதன்பின், பிரதமர் மோடி மற்றும் எகிப்து பிரதமர் முஸ்தபா மத்தவுலி இடையே முதன்முறையாக வட்டமேசை மாநாடு ஒன்றும் நடைபெற்றது.  


அல்-ஹகிம் மசூதியை பார்வையிட்ட மோடி


இதனை அடுத்து, ஹெலியோபோலிஸ் போர் கல்லறையில், முதல் உலகப் போரின்போது வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். பின்பு, எகிப்து அதிபர் சிசியை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து இந்திய மற்றும எகிப்து ஆகிய  இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது. 


இதன்பின்பு, 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க அல்-ஹகிம் மசூதிக்கும் கெய்ரோவில் உள்ள ஹெலியோபோலிஸ் காமன்வெல்த் போர் கல்லறைக்கும் பிரதமர் மோடி இன்று  சென்றார்.1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இமாம் அல்-ஹக்கிம் பி அம்ர் அல்லா மசூதியில், மசூதியின் சுவர்கள் மற்றும் கதவுகளில் உள்ள அழகிய கல்வெட்டுகளை பிரதமர் மோடி பாராட்டினார்.


வரலாறு என்ன?


11ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த மசூதியானது கெய்ரோவில் நான்காவது பழமையான மசூதியாகும். இந்தியாவின் தாவூதி போஹ்ரா சமூகத்தினரின் முக்கியத்துவம் வாய்ந்த கலாசார சான்றாக அல்-ஹகிம் மசூதி திகழ்கிறது. 13,560 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட மசூதி இவர்களின் உதவியுடன் மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது. ஆறு வருடங்களாக புனரமைப்பு பணிகள் முடிந்து, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி திறப்பட்டது.


2017ஆம் ஆண்டு சீரமைப்பு பணிகள் துவங்கி, சுவர்களில் ஏற்பட்ட விரிசல்கள், கதவுகள், கூரையில் உள்ள அலங்கார மர ஓடுகள் போன்றவை பழுதுபார்க்கப்பட்டுள்ளன.


தாவூதி போஹ்ரா மக்கள் - பிரதமர் மோடி


தாவூதி போஹ்ரா சமூக மக்கள்  11ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் குடியேறினர். 1539 ஆம் ஆண்டில் யேமனில் இருந்து குஜராத் மாநிலத்தின் பதான் மாவட்டத்திற்கு வந்தனர். இந்தியாவில் இவர்கள் 5 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளனர். தாவூதி போஹ்ரா சமூக மக்கள் குஜராத் மட்டுமின்றி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசத்திலும் இருக்கின்றனர்.


2011ல் குஜராத்தின் முதல்வராக இருந்த பிரதமர் மோடி, தாவூதி போஹ்ரா சமூகத்தின் அப்போதைய மதத் தலைவரான சையத்னா புர்ஹானுதீனின் 100வது பிறந்தநாளைக் கொண்டாட அழைப்பு விடுத்திருந்தார். 2014ல் புர்ஹானுதீன் மறைந்த பிறகு, பிரதமர் மோடி மும்பைக்கு வந்து அவரது மகனும், வாரிசுமான சையத்னா முஃபத்தால் சைபுதீனுக்கு ஆறுதல் கூறினார்.


2015 ஆம் ஆண்டில், பிரதமர் மோடி, தாவூதி போஹ்ரா சமூகத்தின் தற்போதைய மதத் தலைவரான சையத்னா முஃபாடல் சைஃபுதீனைச் சந்தித்தார். அப்போதும் தாவூதி போஹ்ரா சமூக மக்களை பிரதமர் மோடி சந்தித்து அன்பை பகிர்ந்துக் கொண்டார். இப்படி தாவூதி போஹ்ரா சமூக மக்களிடம் நெருங்கிய உறவு கொண்ட நிலையில், இன்று அல்-ஹகிம் மசூதியை பார்வையிட்டார் மோடி.