பிரான்சில் உள்ள புகழ்மிக்க ஈபெல் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, ஈபெல் டவரின் மூன்று தளங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். உலக மக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய ஈபெல் டவர், மத்திய பாரிசில் அமைந்துள்ளது.


ஈபெல் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல்:


கடந்தாண்டு மட்டும், இங்கு 62 லட்சம் மக்கள் வந்து சென்றுள்ளனர். ஈபெல் டவரை பராமரித்து வரும் என்.இ.டி.இ அமைப்பு, வெடிகுண்டு மிரட்டல் குறித்து குறிப்பிடுகையில், "வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் குழு மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று, ஈபெல் டவர் மாடியில் அமைந்துள்ள உணவகம் உட்பட அனைத்து தளங்களையும் சோதனை செய்தனர்.


இந்த வகையான சூழ்நிலையில் இது ஒரு வழக்கமான செயல்முறை. இருப்பினும், இம்மாதிரியாக வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது அரிதான ஒன்று" என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈபெல் டவரின் தெற்கு தூணில் ஒரு காவல் நிலையம் உள்ளது. பாதுகாப்பு ஏற்பாட்டின் ஒரு பகுதியாக கேமரா மூலம் ஈபெல் டவர் கண்காணிக்கப்படுகிறது. அதேபோல, அங்கு நுழைவதற்கு முன்பு பார்வையாளர்கள் முழு சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.


ஈபில் டவர் பற்றிய சுவாரசிய தகவல்கள்:



  • ஈபெல் டவரின் கட்டுமானப் பணிகள், கடந்த 1887ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் தொடங்கி 1889 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிறைவடைந்தது. இது, அகில உலகக் கண்காட்சி மற்றும் பிரெஞ்சுப்புரட்சி நூற்றாண்டு நிறைவு ஆகியவற்றை நினைவு கூறும் சின்னமாக உருவாக்கப்பட்டது.

  • கோபுரத்தின் மொத்த உயரம் 984 அடி ( 324 மீட்டர்) நிலப்பரப்பு 2. 5 ஏக்கர் ( 412 சதுர அடி , 100 சதுர மீட்டர்) .

  • கோபுரம் முழுவதும் 18, 038 சிறப்பு உருக்கு இரும்புத் துண்டங்களால் உருவாக்கப்பட்டுள்ளது . இந்த துண்டங்கள் அனைத்தும் 2 . 5 மில்லியன் போல்ட்கள் ( bolts ) கொண்டு பொருத்தப்பட்டுள்ளன.

  • இந்தக் கோபுரத்தின் மொத்த எடை 10, 100 டன்கள் எனவும் இதில் இரும்பு பாகத்தின் எடை 7, 300 டன்களாகவும் உள்ளது.

  • இக்கோபுரத்திற்கு 7 வருங்களுக்கு ஒருமுறை தூரிகை உதவியுடன் வர்ணம் தீட்டப்படுகின்றது. இதுவரை வர்ணம் தீட்ட நவீன முறைகள்
    எதுவும் பயன்படுத்தப் படவில்லை .

  • வர்ணம் தீட்டுவதற்கு 60 டன் எடை உடையதும் மண் நிறம் கொண்டதுமான வர்ணக்கலவை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தப்படுகின்றது.

  • இக்கோபுரம் மொத்தமாக மூன்று தட்டுக்களாக அமைந்துள்ளது. இந்த அமைப்பில் உள்ள மொத்த படிக்கட்டுக்கள் எண்ணிக்கை 1, 665 ஆகவும் இதற்குத் துணையாக 8 மின்தூக்கி ( Elevator ) வசதியும் உள்ளது. இக்கோபுரம் ஒவ்வொரு தட்டுக்களிலும் உணவகம், கண்காட்சி மண்டபம், ஓய்வெடுக்கும் பகுதி , சுற்றுலா வெளி, தகவல் நிலையம் என்பவற்றைக் கொண்டுள்ளது.

  • இந்தக் கோபுரத்தின் உச்சி பகுதி 1909 ஆம் ஆண்டிலிருந்து வானொலி ஒலிபரப்பு தேவைக்கும் 1957 -லிருந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு தேவைக்கும் பயன்படுத்தப்படுகின்றது. இத்துடன் கோபுரத்தின் கீழ்பகுதியில் சுரங்க வானொலி நிலையமும் இயங்குகின்றது.