பாகிஸ்தான் நாட்டின் காபந்து பிரதமராகிறார் அன்வர் உல் ஹக் கக்கர். பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த இவர், நாளை காபந்து பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
கலைக்கப்பட்ட பாகிஸ்தான் நாடாளுமன்றம்:
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் 14ஆம் (நாளை மறுநாள்) தேதி முடிவடைய இருந்த நிலையில், அதற்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கலைக்குமாறு அந்நாட்டு அதிபர் ஆரிப் அலிக்கு பிரதமா் ஷெபாஸ் ஷெரீப் கடிதம் எழுதியிருந்தார். நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதைத் தொடா்ந்து, 90 நாள்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இந்த சூழலில், காபந்து அரசை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியில், தேர்தலை மேற்பார்வையிடுவதற்கான காபந்து அரசை அமைப்பதற்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் எதிர்க்கட்சி தலைவர் ராஜா ரியாசும் ஒப்புக் கொண்டனர். அதன்படி, காபந்து அரசை வழிநடத்த செனட் உறுப்பினரான உல் ஹக் கக்கர் தேர்வு செய்யப்பட்டார்.
நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான்:
பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், புதிய அரசாங்கம் அமையும் வரையில் அமைச்சர்களை நியமித்து, காபந்து அரசாங்கத்தை அன்வர் உல் ஹக் கக்கர் வழிநடத்துவார். இதுகுறித்து வெளியான அறிக்கையில், "பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூட்டாக கையெழுத்திட்டுள்ளனர். இது, அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்" எனக் குறிப்பிடப்பட்டது. பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் அனுப்பிய பரிந்துரை கடிதத்திற்கு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.
பாகிஸ்தான் அரசியல்:
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு ஏப்ரல் 10ஆம் தேதி நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ஆளும் கட்சிக்கு எதிராக பெரும்பான்மை எம்பிக்கள் வாக்களித்தனர். இதனால், பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் விலக நேர்ந்தது. பாகிஸ்தான் வரலாற்றிலேயே நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த ஒரே பிரதமர் இம்ரான் கான் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதை தொடர்ந்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தன. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தற்போதைய தலைவருமான ஷெபாஸ் ஷெரீப், பிரதமராக பதவியேற்றார்.
பாகிஸ்தானை பொறுத்தவரையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை காட்டிலும் ராணுவமே அதிகாரம் மிக்க அமைப்பாக திகழ்கிறது. ராணுவத்தின் உதவியோடு கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த இம்ரான் கான், பின்னர், ராணுவத்திற்கு எதிராக செயல்பட்ட காரணத்தால் அவரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.