Ecuador Gunmen: ஈக்வடாரில் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் துப்பாக்கிகளுடன் நுழைந்த முகமூடி அணிந்த கும்பல், அங்கிருந்த பணியாளர்களை கொலை செய்யப்போவதாக மிரட்டி எடுத்துள்ளார்.


தொலைக்காட்சி அலுவலகத்தில் நுழைந்த கும்பல்:


முகமூடி அணிந்த மற்றும் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று செவ்வாயன்று ஈக்வடார் அரசு தொலைக்காட்சி நிலையமான TC அலுவககத்திற்குள் புகுந்தது. நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி முடிவதற்கு சில நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், ஆயுதமேந்திய குற்றவாளிகள் மக்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்தனர். இதையடுத்து, ஈக்வடார் அதிபர் டேனியல் நோபோவா 22 கும்பல்களை பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அந்த கும்பலைச் சேர்ந்த 13 பேரை கைது செய்து, பணையக் கைதிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






வைராலாகும் வீடியோ:


இதுதொடர்பான வீடியோவில், “அரசு தொலைக்காட்சியான டிசி-யின் ஸ்டூடியோவிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல், அங்கிருந்த நபர்களை உடனடியாக தரையில் அமரும்படி மிரட்டியுள்ளனர். நெறியாளர் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்க, அவரது கழுத்தில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளனர். பின்பு தாங்கள் வைத்து இருந்து கையெறிகுண்டுகளையும் எடுத்து கேமரா முன்பு காட்டி அச்சுறுத்தியுள்ளனர். பின்பு அங்கிருந்த பணியாளர்களை கீழே படுக்கவைத்து கை, கால்கள் மற்றும் வாயை கட்டியது” போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நேரலை நிகழ்ச்சி நிறுத்தப்படும்போது பின்புறத்தில், துப்பாக்கி தோட்டாக்கள் வெடிக்கும் சத்தமும் கேட்டது.


ஈக்வடார் பிரச்னை என்ன?


தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் அச்சுறுத்தலாக உள்ள போதை பொருள் கடத்தல் கும்பல்களில் ஒன்று லாஸ் சோனிராஸ். இதன் தலைவராக அடால்போ மசியாஸ் என்ற பிதோ போதை பொருள் கடத்தல் வழக்கில்  சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவர் குவாயாகில் நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து தப்பி சென்றார். இதனை தொடர்ந்து அதிபர் டேனியல் நொபோவா நாடு முழுவதும் நெருக்கடி நிலை உத்தரவை பிறப்பித்து உத்தரவிட்டார். இதையடுத்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்புகள், போலீசார் கடத்தப்படுதல் மற்றும் சிறைகளை தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறிஒ வருகின்றன.


குயிட்டோ நகருக்கு வெளியே, பொதுமக்கள் நடந்து செல்ல கூடிய பாலம் ஒன்றும் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. சிறைகளுக்குள் 6 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. ரியோபம்பாவில் உள்ள சிறைச்சாலையில் இருந்து, மற்றொரு கும்பலை சேர்ந்த தலைவரான பேப்ரிசியோ கோலன் பிகோ என்பவர் தப்பியுள்ளார். பிகோவுடன் மற்ற சிறை கைதிகள் 38 பேர் தப்பி சென்றனர். அவர்களில் 12 பேர் மீண்டும் பிடிபட்டனர். பிதோ தப்பி சென்ற நிலையில், போலீசார் மற்றும் ஆயுத படைகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சூழலில் தான் அரசு தொலைக்காட்சிக்குள் ஆயுதமேந்திய கும்பல் நுழைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.