Maldives Row: இந்திய உடனான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5 நாள் பயணமாக சீனா சென்றுள்ளார்.
இந்தியா - மாலத்தீவு பிரச்னை:
பிரதமர் மோடி லட்சத்தீவு பயணத்தை மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சித்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, இனி மாலத்தீவுகளுக்கு செல்லப்போவதில்லை என பல்வேறு துறைகளை சேர்ந்த இந்திய நட்சத்திரங்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதோடு, ஏற்கனவே மாலத்தீவு பயணத்திற்காக செய்து இருந்த முன்பதிவுகளையும் ரத்து செய்து வருகின்றனர். இதனால் மாலத்தீவு சுற்றுலாத்துறைக்கு பெரும் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனிடையே, பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய 3 அமைச்சர்களையும் மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்துள்ளது. நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களின் கருத்துக்கு மாலத்திவு சுற்றுலா தொழிற்சங்கமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனாலும், இந்த விவகாரம் இன்னும் தனிந்தபாடில்லை.
சீனாவிடம் மாலத்தீவு அதிபர் கோரிக்கை:
இத்தகைய சூழலில் தான் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5 நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். புஜியான் மாகாணத்தில் மாலத்தீவு வர்த்தக மன்றத்தில் பேசிய முய்சு, சீனாவை மாலத்தீவின் நெருங்கிய நட்பு நாடு என்று குறிப்பிட்டார். அந்த உரையில், “சீனா எங்களின் நெருங்கிய நட்பு நாடுகள் மற்றும் வளர்ச்சி பங்காளிகளில் ஒன்றாக உள்ளது. 2014 ஆம் ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்கால் தொடங்கப்பட்ட பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி, மாலத்தீவு வரலாற்றில் காணப்பட்ட மிக முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களை வழங்கியுள்ளன. சீனா எங்கள் சந்தையில் கொரோனாவிற்கு முன்பு முந்தைய முதலிடத்தில் இருந்தது. அந்த நிலையை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளை சீனா தீவிரப்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இதற்காக மாலத்தீவிற்கு வரும் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முய்சு வலியுறுத்தியுள்ளார். இந்தியா உடனான உறவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு மத்தியில், மாலத்தீவு அதிபர் சீனாவிடம் வைத்துள்ள இந்த கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்தியா முதலிடம்:
மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் அந்நாட்டிற்கான மிகப்பெரிய சுற்றுலா சந்தையாக இந்தியா உள்ளது. அதன்படி கடந்த ஆண்டில் 209,198 இந்தியர்களும், 209,146 ரஷ்யர்களும், 187,118 சீனர்களும் வருகை தந்துள்ளனர். 2022ஆம் ஆண்டிலும் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருடன், மாலத்தீவிற்கு அதிக சுற்றுலா பயணிகளை அனுப்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அதைதொடர்ந்து 198,000 சுற்றுலாப் பயணிகளுடன் ரஷ்யா இரண்டாவது இடத்தையும், 177,000 வருகையுடன் இங்கிலாந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அதேநேரம், கொரோனாவிற்கு முந்தைய ஆண்டில் 2.80 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளுடன் சீனா முதலிடத்தைப் பிடித்தது. ஆனால் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் அதன் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான மந்தநிலை காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை புதுப்பிக்க போராடி வருகிறது.