அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்குள்ள இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். அமெரிக்காவுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார் பிரதமர் மோடி. கொரோனா ஊரடங்கால் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் தடைபட்டிருந்தது. கடைசியாக, 2019-ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 13, 14-ஆம் தேதிகளில் பிரதமர் மோடி, பிரேசில் நாட்டுக்கு சென்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். அதன் பின்னர் இன்று தான் அமெரிக்கா சென்றிருக்கிறார்.


அதேபோல், ஜோ பைடன் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்று பின்னர், மோடி அமெரிக்கா செல்வது இதுவே முதல்முறை. எனவே அவரது இந்தப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்நிலையில் அவர் இன்று அதிகாலை அமெரிக்கா சென்றடைந்தார். அமெரிக்காவில் அவருக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் நரேந்திர மோடியை, பாரத் மாதா கி ஜே என்ற கோஷத்துடன் அவர்கள் வரவேற்றனர்.


பிரதமர் அதிகாலை வந்திறங்கிய நேரம் மழை பெய்து கொண்டிருந்தது. ஆனால், மழையையும் பொருட்படுத்தாமல் பிரதமரின் கார் அருகே வந்து இந்தியர்கள் கையசைத்து அவரை வரவேற்றனர். பிரதமர் மோடியும் இந்தியர்களுக்கு கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இன்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்திக்கிறார். பின்னர் அமெரிக்க வர்த்தக நிறுவனங்களின் 4 முக்கியமான அதிகாரிகளையும் அவர் தனித்தனியாக சந்தித்துப் பேசவிருக்கிறார்.


எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள குவாட் மாநாடு:


அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபையின் 76-வது வருடாந்திரக் கூட்டம் கடந்த 14-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகளின் குவாட் அமைப்பு தலைவர்கள் உச்சி மாநாடுட்டில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா வந்துள்ளார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகளின் குவாட் அமைப்பு தலைவர்கள் உச்சி மாநாடு, 24 ஆம் தேதி நடைபெறுகிறது.


இந்தக் கூட்டத்தில், ஆப்கன் விவகாரம், பயங்கரவாத அச்சுறுத்தல், சைபர் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள், பேரிடர் நிவாரணம், காலநிலை மாற்றம், கொரோனா பேரிடர் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.


முன்னதாக நேற்று தனது பயணம் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது அமெரிக்கப் பயணத்தால் அமெரிக்காவுடனான உறவு வலுவடையும். குவாட் உறுப்பு நாடுகளான ஜப்பான், ஆஸ்திரேலியாவுடனான உறவுகளை வலுப்படுத்தவும், சர்வதேச முக்கியத்துவம் உள்ள பிரச்னைகளில் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லவும் ஒரு நல்வாய்ப்பாக இது அமையும்.


இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் சவால்களை இந்தியாவின் பார்வையில் இருந்து அணுகுவோம். அதற்கான எதிர்கால திட்டமிடுதலுக்கு குவாட் உச்சிமாநாடு வழிவகுக்கும்" என்று பதிவிட்டிருந்தார்.