புதுச்சேரி வரலாற்றில் சுதந்திரத்துக்கு பின் இரண்டு முறை மட்டுமே உள்ளாட்சி தேர்தல் நடந்துள்ளது. முதன்முறையாக கடந்த 1968 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின் நீதிமன்ற உத்தரவின்படி 38 ஆண்டுகளுக்குப் பின் கடந்த 2006ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது தேர்வான மக்கள் பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த 2011 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. அதன் பின் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வருகிற அக்டோபர் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையெடுத்து வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, இடஒதுக்கீடு வாரியாக வார்டுகள் பிரிக்கபப்ட்ட நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் வெளியிட்டார். இதன்படி புதுச்சேரி மாநிலத்தில் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் மூன்றுகட்டங்களாக தேர்தலை நடத்தப்படுகிறது. இதற்காக தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் இருந்து 4 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு, பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துகள் உள்ள நிலையில் முதல்கட்டமாக காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நகராட்சிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கு அக்டோபர் 25 ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு அக்டோபர் 28 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.
முதல்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 7 ஆம் தேதி நிறைவடைகிறது. இரண்டாம்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11 ஆம் தேதி நிறைவடைகிறது. மூன்றாம்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதி நிறைவடைகிறது. மூன்றுகட்ட வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நேரத்தை பொறுத்தவரை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வாக்களிக்கலாம் எனவும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் 10 லட்சத்து 3 ஆயிரத்து 755 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அதில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 202 பேர் ஆண்கள், 5 லட்சத்து 30 ஆயிரத்து 930 பெண்கள் என 117 பேர் திருநங்கைகள் ஆவர்