Ecaudor Earthquake : ஈகுவடாரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பெரு மற்றும் ஈகுவடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி 12.12 மணிக்கு 6.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 66 கிலோ மீட்டர் ஆழத்தில் பெருவின் எல்லைக்கு அருகில் உள்ள ஈக்வடார் பாலாவோவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மச்சலா மற்றும் குயென்கா போன்ற நகரங்களில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறி சாலைகளில் முகாமிட்டுள்ளனர்.
மேலும், திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சரிந்துள்ளன. அதோடு மட்டுமல்லாமல் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்களும் நொறுங்கின. இதற்கிடையில், குவாயாகில், குய்டோ, மனாபி, மந்தா உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலநடுக்கம் வலுவாக உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
13 பேர் உயிரிழப்பு
இந்நிலையில், இதனை அறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எல் ஓரோ மாகாணத்தில் 12 பேர் சடலங்களும், அசுவே மாகாணத்தில் ஒருவரின் சடலத்தையும் மீட்புப்படையினர் கண்டறிந்துள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் தற்போது வரை விடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
தொடரும் நிலநடுக்கங்கள்:
முன்னதாக, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் உலகில் பல பகுதிகளில் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6ஆம் தேதி குஜராத்தின் துவாரகா பகுதியில் காலை 6.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.3 புள்ளியாக இந்த நிலநடுக்கம் பதிவானது.
மார்ச் 5ஆம் தேதி அடுத்தடுத்து தொடர்ந்து ஜம்மு, ஆப்கான் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின் எல்லை நாடான ஆஃப்கானிஸ்தான் ஃபைசதாபாத்தில் காலை 6.10 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நடுக்கவியியல் மையம் தெரிவித்தது. இதன் மையமானது, 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அள்வுகோலில் 4.3 அளவாக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 4.1 புள்ளி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் தஜிகிஸ்தானின் முர்ஹொப் நகரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள நோனி நகரில் அதிகாலை 2.46 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானது. நிலநடுக்கம் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்தது.
இவை அனைத்தும் துருக்கியில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தை ஒப்பிடும் போது லேசானது. ஆனாலும் துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகை உளுக்கிய நிலையில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.