ஜப்பானில் மேற்கு மாகாணமான இஷிகாவாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில்  6.3 ஆக பதிவாகிய நிலநடுக்கம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதியம், இஷிகாவா மாகாணத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அதி தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. 


ஜப்பானை அலறவிட்ட நிலநடுக்கம்:


அதேபோல, நிலநடுக்கத்தின் காரணமாக அணுமின் நிலையத்தில் சேதம் ஏற்பட்டு அதனால் ஏதேனும் விளைவு ஏற்படுமோ என அச்சம் எழுந்தது. ஆனால், அப்படிப்பட்ட எந்த விதமான நெருக்கடியும் ஏற்படாது என அரசு விளக்கம் அளித்துள்ளது.


இஷிகாவாவில் அமைந்துள்ள ஷிகா அணுமின் நிலையத்திலும், நீகாட்டாவின் அண்டை மாகாணத்தில் உள்ள காஷிவாசாகி-கரிவா ஆலையிலும் அசம்பாவிதம் ஏதவும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும், கடல் மட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என வானிலை மையம் தகவல் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ஜப்பான் கடற்கரையில் உள்ள இஷிகாவா மாகாணத்தின் நோட்டோ தீபகற்பத்தின் வடக்கு முனையிலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. டோக்கியோவில் இருந்து வடமேற்கே 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீபகற்பத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.


நிலநடுக்கத்தின் காரணமாக உயிர் சேதம் ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், ரயில் சேவை சிறிது நேரம் நிறுத்தப்பட்டன. பிரபலமான சுற்றுலா தளமான நாகானோ மற்றும் கனாசாவா இடையே ஷிங்கன்சென் புல்லட் ரயில்கள் நிறுத்தப்பட்டன. நிலநடுக்கம் பாதித்த பகுதியில் மேலும் சில நிலநடுக்கங்களால் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. பசிபிக் பெருங்கடலில் தென்கிழக்கு ஆசியா தொடங்கி பசிபிக் படுகை முழுவதும் நீண்டுள்ள பகுதியில் எரிமலை வெடிப்புகள் மற்றும் பூகம்பங்கள் அதிகம் நிகழும். இந்த பகுதிகள் "Ring of Fire" என அழைக்கப்படுகிறது.


தொடரும் நிலநடுக்கங்கள்:


இந்தாண்டு தொடங்கியதில் இருந்தே, உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. சமீபத்தில், இந்தோனேசியா மலுகு பிராந்தியத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ள நிலநிடுக்கம் இந்தோனேசியாவை உலக்கியுள்ளது. 


அதேபோல, துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கும் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில், கடந்த வாரம் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டது . பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.  


கடந்த 2011ஆம் அண்டு ஜப்பானின் புகுஷிமா நகரில் நிகழ்ந்த அணு உலை விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை காட்டிலும் அதிக உயிரிழப்பு, இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ளது.