1969-ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த யுனெஸ்கோவின் மாநாட்டில், ஜான் மெக்கானெல் என்பவரால் பூமியை பெருமைப்படுத்தும் வகையில் முன்மொழியப்பட்ட நாள்தான் இந்த உலக பூமி தினம். இந்நிலையில் வருடம்தோறும் ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி பூமி மாசுபடுவதை குறைக்கவும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில் கூகுள் நிறுவனம் மரம் நடுவது குறித்த ஒரு விழிப்புணர்வு டூடுலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.    






உலக வெப்பமயமாதலை தடுக்க மரங்கள் பெருமளவு உதவும் என்பது பலரும் அறிந்ததே. இன்று நாம் நடும் மரங்கள் நமது வருங்கால சந்ததிகளுக்கும் அவர்களுக்கு பின்னால் வரும் சந்ததியினருக்கும் பெருமளவு உதவியாக இருக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. மறைந்த நடிகர் விவேக் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல்கலாமுடன் இணைந்து இந்தியா முழுவதும் ஒரு கோடி மரங்கள் நடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர் மரணித்தார். இருப்பினும் அவருடைய ரசிகர்கள் பலரும், திரைபிரபலங்கள் பலரும் அவருடைய மறைவுக்கு நாம் செலுத்தும் முறையான மரியாதை என்பது, மரக்கன்றுகளை நட்டு அவர் கனவுகண்ட அந்த 1 கோடி மரங்கள் என்ற இலக்கை அடைவது மட்டுமே என்று கூறுகின்றனர்.




உலக பூமி தினமான இன்றோடு மரம்நடுவதை நிறுத்திவிடாமல், நம்மால் இயன்றவற்றை தொடர்ந்து செய்தால் பூமி வெப்பமாவதை நம்மால் நிச்சயம் தடுக்க முடியும். இந்த உலக பூமி தினத்தில் இந்த பூமி குறித்த சில சுவாரசிய தகவல்களை அறிவோம். நாம் வாழும் இந்த பூமியின் வயது சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள், பூமியின் மையப்பகுதியில் நிலவும் வெப்பமானது சூரியனின் மேற்புறத்தில் நிலவும் வெப்பத்திற்கு இணையானது என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மோஸ் (Moss) என்ற தாவரம் பூமியின் பல பகுதிகளில் வளர்கின்றது, சிறப்பு அம்சமாக இந்த தாவரங்களால் காற்றில் இருந்து நேரடியாக நீரை எடுத்துக்கொள்ளமுடியும். 








2100-ஆம் ஆண்டு தொடக்கத்தில் உலக அளவில் கடலின் மட்டம் தற்போது இருப்பதை விட சுமார் 2.5 அடி அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூமியின் வெப்பநிலையை எப்போதும் சீராக வைத்துக்கொள்ள மேகங்கள் பெருமளவில் உதவுகின்றன. இவை அனைத்திற்கும் மேலாக மனித இனத்தைவிட இந்த பூமி சுமார் 10,000 மடங்கு பழமையானது என்பதால் அதை மதித்து பேணி பாதுகாப்போம்.