கடந்த 2022ஆம் ஆண்டு, பாஜகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக இருந்த நுபூர் சர்மா, முகமது நபிகள் குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நுபூர் சர்மாவை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது.
சர்ச்சை கருத்து தெரிவித்த நுபூர் சர்மா:
பிரச்னையை தீர்க்கும் வகையில் அனைத்து மதங்களை மதிப்பதாக மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. சர்வதேச அளவில் எழுந்த அழுத்தம் காரணமாக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நுபூர் சர்மாவை பா.ஜ.க. நீக்கியது. இந்த நிலையில், நுபூர் சர்மாவை துணிச்சலானவர் என நெதர்லாந்து நாட்டின் அரசியல் தலைவர் கீரிட் வில்டர்ஸ் பாராட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு வரும்போது நுபூர் சர்மாவை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் கீரிட் வில்டர்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ல் பக்கத்தில் அவர் குறிப்பிடுகையில், "உண்மையைப் பேசியதற்காக இஸ்லாமியர்களால் பல ஆண்டுகளாக அச்சுறுத்தப்படும் துணிச்சலான நுபூர் ஷர்மாவுக்கு நான் தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவித்தேன்.
உலகெங்கிலும் உள்ள சுதந்திரத்தை விரும்பும் மக்கள் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும். இந்தியாவுக்குச் செல்லும் போது ஒரு நாள் அவரை நேரில் சந்திப்பேன் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு, முகமது நபிகள் சர்ச்சை வெடித்தபோதே, நுபூர் சர்மாவுக்கு கீரிட் வில்டர்ஸ் ஆதரவு தெரிவித்திருந்தார்.
புகழ்ந்து தள்ளிய நெதர்லாந்து அரசியல் தலைவர்:
நுபூர் சர்மாவை நோபல் பரிசுக்கு தகுதியானவர் என குறிப்பிட்டிருந்த கீரிட் வில்டர்ஸ், "உண்மையைத் தவிர வேறெதையும் பேசாத ஹீரோ நுபூர் ஷர்மா. முழு உலகமும் அவரைப் பற்றி பெருமைப்பட வேண்டும். அவர் நோபல் பரிசுக்கு தகுதியானவர். இந்தியா ஒரு இந்து தேசம். இஸ்லாமிய வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிராக இந்துக்களை வலுவாக பாதுகாக்க இந்திய அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது" என கூறியிருந்தார்.
நெதர்லாந்தில் கடந்தாண்டு நடந்த தேர்தலில் கீரிட் வில்டர்ஸின் தேசியவாத சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றது. ஆனால், பெரும்பான்மையை பெறவில்லை. கூட்டணி ஆட்சியை அமைக்க கீரிட் வில்டர்ஸ் முயற்சித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம், தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே பிரதமராக பதவி வகித்து வரும் மார்க் ரூட்டே கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறார்.
நெதர்லாந்து கீழ் சபை 150 உறுப்பினர்களை கொண்டது. ஆட்சி அமைப்பதற்கு 76 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அடுத்த பிரதமராக வருவதற்கு கீரிட் வில்டர்ஸ்-க்கு அதிக வாய்ப்புள்ளது.