ஜாம்பியா நாட்டில் காலரா நோய்த்தொற்று அதிகரித்து காணப்படுகிறது. நாளுக்கு நாள் அதனால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வரை காலரா பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,526 ஆக இருந்தது. தற்போது வரை 613 பேர் காலரா நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.


குறிப்பாக லுகாசா மாகாணத்தில் தொற்று பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்படுகிறது. ஜாம்பியா நாட்டில் வரும் மே மாதம் வரை மழைக்காலம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் காலரா தொற்று நோய் அதிகரிக்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மழைக்காலம் மற்றும் நோய்த்தொற்றால் பலருக்கும் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.









இந்த சூழலில், ஜாம்பியா நாட்டுக்கு தேவையான நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள், குளோரின் மாத்திரைகள் மற்றும் பிற பொருட்கள் உள்ளடங்கிய 3.5 டன் எடையிலான உதவி பொருட்கள் இந்திய சார்பில் 2 வது முறையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தூதர் வழியே ஜாம்பிய அரசிடம் நேற்று (சனிக்கிழமை) ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதனை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவருடைய எக்ஸ் சமூக வலைத்தளப்பகுதியில் பதிவிட்டுள்ளார்.


ஜாம்பியா கடந்த சில வாரங்களாக காலரா நோயால் தத்தளித்து வருகிறது, இதன் காரணமாக அந்நாட்டில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. "காலரா எமர்ஜென்சி" என்று விவரிக்கப்பட்டுள்ள சூழ்நிலையைச் சமாளிக்க ஜாம்பியா கூடுதல் மருத்துவ உதவியைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.


நோய் பரவாமல் தடுக்க பொது நிறுவனங்கள் கை கழுவும் வசதிகளை ஏற்படுத்தி உள்ளன. ஜாம்பியாவில் காலரா வெடிப்பு முதன்முதலில் 2023 இலையுதிர்காலத்தில் கண்டறியப்பட்டது, ஆனால் டிசம்பர் மாதம் முதல் தொற்று அதிகரிக்கத் தொடங்கியதாக அதிகார வட்டம் கூறுகிறது.  சர்வதேச செஞ்சிலுவைச் சங்கங்களின் கூற்றூப்படி ( International Federation of Red Cross and Red Crescent Societies), இந்த நோய்த்தொற்று ஜாம்பியா தலைநகர் பகுதியில் பரவத் தொடங்கியதாகவும்,  ஜனவரி மாத தொடக்கம் வரை சுமார் 333 உயிரிழப்புகள் ஏறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாம்பியாவில் கடைசியாக 2017-18 ஆம் ஆண்டு இடையிலான காலக்கட்டத்தில் காலரா தொற்றால் 114 பேர் உயிரிழந்தனர். ஜாம்பியாவிற்கும் அதன் அண்டை நாடுகளான மலாவி மற்றும் ஜிம்பாப்வேக்கும் இடையே உள்ள நெருங்கிய உறவைக் கருத்தில் கொண்டு, இந்த இரண்டு நாடுகளிலும் இந்த நோய் கட்டுப்படுத்தப்படாமல் விட்டால் மிகவும் மோசமாக பரவும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக கூறப்படுகிறது.