வேலை நேரத்தில் வெப் கேமராவை ஆன் செய்யாததால்  டச்சு நாட்டை சேர்ந்த ஊழியர் ஒருவரை அமெரிக்க நிறுவனம் பணிநீக்கம் செய்த வழக்கில், இத்தகைய கோரிக்கைகள் தனியுரிமை மற்றும் மனித உரிமைகளை மீறுவதாக இருப்பதாக நெதர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


புளோரிடாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சேட்டு நிறுவனம், நெதர்லாந்தில் ஒரு டெலிமார்க்கெட்டரை பணியமர்த்தி உள்ளது. மேலும், நிறுவனத்தின் விதிகளின்படி, பணியாளரின் வெப்கேமை இயக்குமாறு வலியுறுத்தியுள்ளது.


 






ஆனால், ஒரு நாளைக்கு 9 மணி நேரம் கண்காணிக்கப்படுவதை விரும்பாத அந்த ஊழியர் வெம்கேமை ஆன் செய்ய மறுத்துவிட்டார். விதியின்படி, கணினி திரையில் என்ன இருக்கிறது என்பதையும் அவர் ஸ்கிரீன் ஷேர் மூலம் தெரியப்படுத்த வேண்டியிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த அவரை, பணி செய்ய மறுத்தல், கீழ்ப்படியாமை ஆகிய காரணத்தை கூறி வேலையை விட்டு தூக்கியது.


இதையடுத்து, நியாயமற்ற முறையில் பணி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறி சேட்டு நிறுவனத்திற்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பணி நேரம் முழுவதும் வெப்கேமை ஆன் செய்ய சொல்வது தொழிலாளர்களின் தனியுரிமைக்கு எதிரானது என கருத்து தெரிவித்துள்ளது.


ஒரு படி மேலே சென்று, வெப் கேமரா மூலம் கண்காணிப்படுவது மனித உரிமை மீறல் என்றும் நீதிமன்றம் கூறியது. ஊழியரின் நீதிமன்றச் செலவுகள், 50,000 அமெரிக்க டாலர்கள் அபராதம், ஊதிய பாக்கி, பணியாளரின் ஊதியம், பயன்படுத்தப்படாத விடுமுறை நாட்கள் மற்றும் பல செலவுகளை ஊழியருக்கு வழங்க வேண்டும் என சேட்டு நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


மேலும், பணி காலத்திற்கு பிறகு போட்டி நிறுவனத்திற்கு பணியில் சேர கட்டுப்பாடு விதிக்கும் விதியை நீக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேலை நேரத்தில் தனது திரையைப் பகிர்வதால், அவரையும் அவரது செயல்பாடுகளையும் நிறுவனம் ஏற்கனவே கண்காணித்து வருவதாக ஊழியர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.


ஒரு நாளைக்கு 9 மணி நேரம் வெப்கேமராவை ஆன் செய்ய வேண்டிய தேவை இல்லை, அது தனியுரிமை மீறல் என்றும் தனக்கு அது சங்கடமாக இருந்தது. எனவே, வெப்கேமை ஆன் செய்யவில்லை என ஊழியர் நிறுவனத்திடம் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும், அவரை நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.