மம்மி ரிடர்ன்ஸ் திரைப்படத்தின் ரசிகர்களுக்கு மணல் புயல் போலக் கிளம்பி பயங்கரமாக எழும்பி வரும் காட்சி மறக்காது. அது நிஜமாகவே நிகழ்ந்துள்ளது எனச் சொன்னால் நம்ப முடிகிறதா?. சீனாவில் அப்படியான உயரமான மணல் சுவர் சீறி எழுந்து மக்களை பீதியடையச் செய்துள்ளது. சீனாவின் டுன்ஹாங் மாகாணத்தில் சுமார் 300 அடி உயர ராட்சத மணல் சுவர் உருவாகி அங்கே பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த நகரத்தில் சுமார் 20 அடி தூரம் வரை முன்னால் இருக்கும் எந்த உருவமும் தெரியாமல் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் சீனாவின் அருகில் இருக்கும் கோபி பாலைவனத்திலிருந்து உருவான மணற்புயலால் சீனா முழுவதும் போக்குவரத்தில் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் முக்கியச் சாலைகளைக் காவல்துறை மூடியுள்ளது. 






ஒவ்வொரு வருடமும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பீஜிங் மற்றும் மங்கோலிய பீடபூமி முழுவதும் மணற்புயல் உண்டாகும். கோபி பாலைவனத்துக்கு அருகேயே இருப்பதால் இவை மணற்புயல் பாதிப்புக்கு உள்ளாகும். காடுகள் அழிப்பு மற்றும் மணல் அறிப்பு காரணமாக 1950களில் இருந்தே இந்த நிலை அங்கே நீடித்து வருகிறது. குறிப்பாக மங்கோலிய எல்லைகளில் காடுகள் அழிக்கப்பட்டதால் அதுவரை காடுகளின் மரங்கள் மணற்புயலில் இருந்து அளித்த பாதுகாப்பு பறிபோனது. இதனால் சீனா காடுகளை உருவாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மணல் புழுதிகள் எளிதில் களைந்து செல்வதற்கான காற்றுப்பாதைகளும் உருவாக்கப்பட்டன. சீனாவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் இந்தத் திட்டங்களால் மணற்புயல் நீடிக்கும் காலக்கட்டம் குறைந்துள்ளதாகக் கூறியுள்ளது. இதனால் அங்கே சராசரி மணற்புயல் காலம் 26 லிருந்து 3 எனக் குறைந்தது என அறிவித்தாலும் தற்போது இந்தப் புயலால் ஏற்பட்டுள்ள தாக்கம் சில மாதங்களாக நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் 


இந்த மணற்புயலால் மங்கோலியாவில் இதுவரை 10 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மங்கோலியாவின் சீனப் பகுதியில் உள்ள  மூன்று நகரங்களில் பள்ளிகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. பொதுப்போக்குவரத்து தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. மங்கோலியாவிலிருந்து புறப்படும் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சீனாவைப் பொருத்தவரை நிங்க்சியா மாகாணம் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 19 வருடங்களில் இல்லாத அளவிற்கான அடர்த்தியான மணற்புயல் இது என அந்த மாகாண மக்கள் குறிப்பிட்டுள்ளனர். 


சீனாவின் மாசு பாதிப்பு இதனால் 160 மடங்கு அதிகரித்துள்ளது. 12 மாகாணங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. பீஜிங்கில் 300 மீட்டர் வரை சாலைகளில் எதிர்வரும் எதுவும் தெரியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நகரத்தின் முக்கிய விமான நிலையங்களில் இருந்து சுமார் 400 விமானங்கள் இதனால் ரத்து செய்யப்பட்டுள்ளன.