அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் ரோட்னி ஜேம்ஸ் அல்கலா. 1970-களில் அல்கலா என்ற பெயர் அன்றாடம் அமெரிக்க செய்தித்தாள்களில் அடிபட்ட பெயர். இளம்பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி அவர்களை வன்கொடுமை செய்து பின்னர் கழுத்தை நெறித்து கொலை செய்தார் என்பதே இவர் மீதான குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டு நிரூபணமானதால் அல்கலா சிறையில் அடைக்கப்பட்டார். 77 வயதான அல்கலா சிறையில் இறந்தார். வயது மூப்பின் காரணமாக இயற்கையாகவே இறந்ததாக சிறைத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு அல்கலாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 2013 ஆம் ஆண்டு அல்கலாவுக்கு கூடுதலாக 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தான் அல்கலாவின் உயிர் இயற்கையாகப் பிரிந்துள்ளது.
அல்கலாவும், 1970-உம்
நீதிபதி அவர்களே.. உங்களின் முன்னால் நிற்பது இளம் பெண்களைத் தேடித்தேடி வேட்டையாடிய ஒரு கொலைகாரன்.. இப்படித்தான் கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் அல்கலாவை அரசுத் தரப்பு வழக்கறிஞர் மேட் மர்ஃபி அறிமுகம் செய்தார். 1977-இல் இருந்து 79 வரையிலான இரண்டாண்டு காலத்தில் அல்கலா 100-க்கும் மேற்பட்ட இளம் பெண்களைக் கடத்தி கற்பழித்துக் கொன்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், ஒரு சில உடல்கள் தான் கிடைத்துள்ளதால் அல்கலாவால் கொலை செய்யப்பட்டோரின் எண்ணிக்கை துல்லியமாகத் தெரியவில்லை. அல்கலாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 100-க்கும் மேற்பட்ட இளம் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள் இருந்துள்ளன.
தி டேட்டிங் கேம்.. 'The Dating Game'
அல்கலாவின் கொலைகளுக்கு தி டேட்டிங் கேம்.. 'The Dating Game' என்று அச்சுறுத்தும் அடைமொழி சூட்டப்பட்டது. அல்கலா 12 வயது தொடங்கி 30 வரையிலான இளம் பெண்களையே குறி வைத்துள்ளார். அவர் அணுகும் பெண்களைப் பற்றி வர்ணித்து, புகழ்ந்து பேசி அவர்களுடன் நட்பு பாராட்டுவார். பின்னர் அவர்களை நம்பவைத்து அவர்களை தனது வசிப்பிடத்துக்கு அழைத்துச் செல்வார். அங்கே ஆசை வார்த்தைகளால் அவர்களைக் குளிரச் செய்து அவர்களின் நிர்வாணப் புகைப்படங்களை எடுத்துக் கொள்வார். பின்னர், அந்தப் பெண்களை வன்கொடுமை செய்தோ இல்லை அவர்களின் விருப்பத்துடனேயேவோ உறவு கொள்வார். அத்துடன் அவர் ஆசை தீர்ந்துவிடாது. அங்கேதான் அவருக்குள் இருக்கும் கில்லர் விழித்துக் கொள்வான். பெரும்பாலும் கழுத்தை நெறித்து மூச்சுத் திணறவைத்து கொல்வதே அவரின் கொலை பாணியாக இருந்துள்ளது. சில நேரங்களில் சுத்தியால் அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், அந்தப் பெண்ணின் காதணிகளை மட்டும் எடுத்துவைத்துக் கொள்வார். அதுதான் அவர் ட்ராஃபியாக அதாவது தான் வெற்றியடைந்துவிட்டதற்கான கோப்பையாக நினைத்துள்ளார்.
இந்த வழக்கில் போலீஸுக்கு முக்கிய ஆதாரமாகக் கிடைத்தது அல்கலா எடுத்த நிர்வாணப் புகைப்படங்களும், அவர் சேர்த்து வைத்திருந்த விதவிதமான காதணிகளுமேதான்.
பல கொலைகளை அல்கலா செய்திருந்தாலும் கூட தெற்கு கலிஃபோர்னியாவில் நடந்த 5 கொலைகளில் அவர் கையும் களவுமாக சிக்கியுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு அல்கலாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 2013 ஆம் ஆண்டு அல்கலாவுக்கு கூடுதலாக 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தான் அல்கலாவின் உயிர் இயற்கையாகப் பிரிந்துள்ளது.