உலகின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்று துபாய். மத்திய கிழக்கு பகுதியில் உள்ள துபாய் நகரத்தில் பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளம் போல காட்சியளிப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மிக கனமழை:
வறண்ட காலநிலைக்கும், மழை குறைவாக பொழியும் பகுதிக்கும் பெயர் பெற்ற நகரமான துபாயில், நேற்று (ஏப்ரல் 16) அன்று வரலாறு காணாத அளவிற்கு பலத்த மழை பெய்தது. எதிர்பாராத மழையால், சர்வதேச பயணிகளுக்கான, உலகின் பரபரப்பான விமான மையம் மற்றும் பல வணிக வளாகங்கள் உட்பட நகரின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
இதுகுறித்து சர்வதேச செய்திகள், ஏப்ரல் 16 அன்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் வரலாறு காணாத அளவு மழை பெய்தது. சில பகுதிகளில் 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் 254 மிமீ மழை பெய்ததாக வானிலை மையம் கூறியிருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று பெய்த மிக கன மழையால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வைரலாகும் காட்சிகள்:
அண்டை நாடான ஓமனில் இதேபோன்ற கனமழை சில நாட்களுக்கு முன் பெய்தது. இந்நிலையில், அங்கு கனமழை பெய்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கனமழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மழை நீர் வெள்ளம் போல் செல்லும் காட்சியை அந்நாட்டில் இருப்போர் சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டுள்ளனர். அதில் ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோவில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வெள்ள நீரில் மூழ்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், காருக்குள் இருந்தபடியே வெள்ளக்காட்சியை படம்பிடிக்கும் வீடியோ தெரிகிறது. இந்த வீடியோவை 20,000க்கும் மேற்பட்டோர்கள் பார்த்துள்ளனர். இந்த காட்சியை பார்தத பலரும் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.