பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா? என்பதை புலியை வைத்து வேடிக்கை காட்டி அறிவித்த துபாய் தம்பதி சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.


இன்ஸ்டாகிராமில் அவர்கள் வெளியிட்ட வீடியோவைத்து நெட்டிசன்கள் அவர்களை வறுத்தெடுத்து வருகின்றனர். துபாயின் புர்ஜ் அல் அராப் ஓட்டலில் தான் அந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. ஒரு பெரும் பணக்கார தம்பதி தங்கள் குழந்தையின் பாலின அறிவிப்பு விழாவுக்கு பிரம்மாண்ட ஏற்பாடு செய்திருந்தனர். விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்கள் புர்ஜ் அல் அராப் ஓட்டலின் வெளியே உள்ள கடற்கரையில் அமர வைக்கப்பட்டனர். அங்கே ஒரு ஆண் புலி அழைத்து வரப்பட்டது. புலி பார்க்கவே பயங்கரமாக அதாவது முழு பலத்துடன் கம்பீரமாக இருந்தது. அந்தப் புலியை சங்கிலியால் பிணைக்கவும் இல்லை. புலி பீச் மணலில் அழகாக உலா வர அதன் முன்னாள் ஒரு கருப்பு பலூனை பறக்கவிடுகின்றனர். புலி சற்று கூர்ந்து கவனித்து விட்டு ஒரு ராயல் ஜம்ப் அடித்து அந்த பலூனை ஒரு குத்து விடுகிறது. பலூன் உடைந்து அதிலிருந்து பிங்க் நிற தூள் கொட்டுகிறது. பிங்க் நிற தூள் கொட்டியதால் விருந்தினர்கள் அனைவரும் பிறக்கப் போகும் குழந்தை பெண் எனத் தெரிந்து கொள்கின்றனர். இந்த வீடியோவை அந்தத் தம்பதி அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர்.


புதுமையாக புலியை வைத்து பாலினத்தை அறிவித்ததை நினைத்து சிலாகித்து பாசிடிவ் ரெஸ்பான்ஸ் வரும் என்ற எதிர்பார்ப்புடன் அந்த தம்பதி வீடியோவை வெளியிட ஆனால் நடந்ததோ வேறு.


பகட்டுக்காக எது வேண்டுமானாலும் செய்வீர்களா என்று தம்பதியை நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர். மேலும், ஒருவேளை புலி திரும்பி கூட்டத்துக்குள் பாய்ந்தால் என்ற பகீர் கேள்வியை எழுப்பியுள்ளனர்.


நம்மூரில் பெண்ணுக்கு வளைகாப்பு பூட்டுவது பிரபலம் என்றால் துபாயில் இவ்வாறாக பாலினத்தை அறிவிப்பத்து தான் பிரபலம். ஆனால் இந்த குறிப்பிட்ட தம்பதி புலியை வைத்து வித்தை காட்டியது பிராப்ளமாக இருக்கிறது.






இந்தியாவில் குற்றம்:


கருவின் பாலினம் அறிவித்தல், பாலின தேர்வை தடைசெய்தல் சட்டம் 1994 ஜியின் படி தடை செய்யப்பட்டுள்ளது. கருவில் பாலினம் ஆணா, பெண்ணா என அறிய வலியுறுத்தும் கணவன் மற்றும் மனைவி உறவினருக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது.


1994 இல் இந்திய அரசு குழந்தை பிறப்புக்கு முன்னரே அதன் பாலினம் அறிசோதனையையும் பெண்கருக் கலைப்பையும் தடை செய்து சட்டம் கொண்டு வந்துள்ளது[10]. இப்போது இந்தியாவில் கருவின் பாலினத்தைக் கண்டுபிடித்துச் சொல்வது சட்டப்படிக் குற்றமாகும். எனினும் இச்சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது குறித்த அக்கறையும் நிலவுகிறது.