கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வானில் பல விண்கற்கள் தென்பட்டன. அவை மிகவும் அழகான காட்சியை அளித்த போதும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குத் துன்பம் தருவதாக அமைந்துள்ளது. நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் வீட்டுக் கூரையை உடைத்து விழுந்த விண்கல் அவரது அருகில் விழுந்துள்ளது. விண்கல் விழுந்த ஒலிகேட்டு எழுந்த பெண் தனது முகத்தில் அதன் தூசி படிந்திருப்பதைக் கண்டு அதிர்ந்துள்ளார். குழப்ப மனநிலையில், தன்னைச் சுற்றி நோட்டமிட்ட போது, அவருக்கு அருகில் இருந்த தலையணையில் விண்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மிகச்சிறிய இடைவெளியின் அளவில் மரணத்தில் இருந்து தப்பியுள்ளார் ரூத் ஹேமில்டன் என்ற இந்தப் பெண். `உடனே எழுந்து, விளக்கை ஆன் செய்தேன். என்ன நடந்தது என்று எனக்கு எதுவும் விளங்கவில்லை’ என்று கூறியுள்ளார் ரூத் ஹேமில்டன். 


தான் தலை வைத்து படுக்கும் தலையணையின் மீது விண்கல்லைக் கண்டவுடன், ரூத் ஹேமில்டன் அவசர உதவியை அழைத்துள்ளார். கடந்த அக்டோபர் 4 அன்று, ரூத் ஹேமில்டனின் வீட்டில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் சுற்றுலா பகுதி ஒன்றில், விண்கல் விழுவதைப் பார்வையிட மக்கள் குழுமியிருந்தனர். 



ரூத் ஹேமில்டனின் அழைப்பை அடுத்து, அவரது வீட்டில் சோதனை செய்த காவல்துறையினர் அவரது வீட்டிற்குள் கல் வந்தது எப்படி என்ற கோணத்தில் விசாரணை செய்து, அருகில் சுரங்கப்பகுதியில் பணி நடைபெற்றால் வெடித்த போது வந்திருக்கலாம் என்று முடிவுக்கு வந்தனர். எனினும், அப்பகுதியில் வெடி எதுவும் வைக்கப்படவில்லை. ரூத் ஹேமில்டன் வீட்டிற்குள் விழுந்த கல், விண்கல் என்ற முடிவுக்குக் காவல்துறையினர் வந்துள்ளனர். 


`வீட்டிற்குள் விண்கல் விழுந்த போது, நான் பயந்து நடுங்கினேன். வீட்டிற்குள் யாரோ குதித்திருக்கிறார்களோ என்று எண்ணினேன். விண்ணில் இருந்து கல் விழுந்ததால் தற்போது அச்சம் நீங்கியிருக்கிறது’ என்று ரூத் ஹேமில்டன் தெரிவித்துள்ளார். `நான் உயிரோடு இருக்கிறேன் என்பதே அதிசயமாகவும், மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது’ என்றும் அவர் கூறியுள்ளார். 



ரூத் ஹேமில்டன் தனது வீட்டை உடைத்துக் கொண்டு விழுந்த விண்கல்லை என்ன செய்யப் போகிறார் என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்குப் பதிலளித்துள்ள ரூத் ஹேமில்டன் தனது பேரக் குழந்தைகளுக்காக அதனைப் பத்திரப்படுத்தி வைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். விண்கல் விழுந்த அனுபவம் தனக்கு மிகப்பெரிய வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார் ரூத் ஹேமில்டன். தனது வாழ்க்கை விலைமதிப்பற்றது என்பதையும், அதற்கு மதிப்பு கொடுக்காமல் வாழ்ந்ததைச் சரிசெய்யப் போவதாகவும் ரூத் ஹேமில்டன் தெரிவித்துள்ளார்.


ரூத் ஹேமில்டனின் வீட்டைச் சரிசெய்து தருவதாகக் காப்பீட்டு நிறுவனங்கள் ஒப்புக் கொண்டிருந்த போதும், இவ்வாறான கோரிக்கையை இதுவரை கேட்டது இல்லை எனக் கூறியுள்ளன.