அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று அமெரிக்க இந்தியரான முனைவர் ஆர்த்தி பிரபாகரை அமெரிக்க அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராக நியமித்து அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு அமெரிக்க செனெட்டில் உறுதி செய்யப்பட்டால், முனைவர் ஆர்த்தி பிரபாகருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான முதன்மை ஆலோசகர், அமெரிக்க அதிபரின் பிரத்யேக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஆலோசகர்களின் கவுன்சிலில் இடம், அதிபரின் அமைச்சரவையின் உறுப்பினர் பதவி ஆகியவை வழங்கப்படும்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், `அதிபர் பைடன் முனைவர் ஆர்த்தி பிரபாகரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கைக்கான அலுவலகத்தின் இயக்குநராக நியமனம் செய்துள்ளார். மேலும், அவரது பொறுப்பு உறுதி செய்யப்படும் போது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தலைவரின் உதவியாளராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்படுவார். மேலும் அவருக்கு அமெரிக்க அதிபரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான முதன்மை ஆலோசகர் பதவி, அமெரிக்க அதிபரின் பிரத்யேக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஆலோசகர்களின் கவுன்சில் பதவி, அதிபரின் அமைச்சரவையின் உறுப்பினர் பதவி ஆகியவை வழங்கப்படும்’ எனக் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முனைவர் ஆர்த்தி பிரபாகரைப் புத்திசாலி எனவும், பெரிதும் மதிக்கப்படும் அறிவியலாளர் எனவும் வர்ணித்துள்ளார். மேலும், அறிவியல், தொழில்நுட்பம் முதலானவற்றில் கூடுதல் ஆய்வுகளை மேற்கொள்வது, கடினமான சவால்களை எதிர்கொள்வது, சாத்தியமற்றதை சாத்தியமாக்குவது முதலானவற்றைச் செய்ய இந்திய அமெரிக்கர்கள் அமெரிக்காவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கைக்கான அலுவலகத்திற்குத் தலைமை தாங்குவார்கள் எனவும் கூறியுள்ளார்.
இதற்கு முன்பாக, அமெரிக்க செனட் சார்பாக தேசிய தரம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் முனைவர் ஆர்த்தி பிரபாகர். அந்தப் பதவியைப் பெற்ற முதல் பெண்ணும் இவரே. தொடர்ந்து அவர் அமெரிக்காவின் டார்பா ( Defense Advanced Research Projects Agency) என்றழைக்கப்படும் அரசு அமைப்பின் தலைவராகவும் அவர் செயல்பட்டார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள குறிப்பில், `அமெரிக்காவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கைக்கான அலுவலகத்திற்குத் தலைவராக ஆர்த்தி பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்டால் துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கேத்தரின் டாய் ஆகியோருக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அமைச்சரவையில் இடம்பெறும் மூன்றாவது ஆசிய அமெரிக்கராக இருப்பார்’ எனக் கூறப்பட்டுள்ளது
ஆர்த்தி பிரபாகர் தான் மூன்று வயதாக இருக்கும் போது, அவரது குடும்பம் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்றுள்ளார். டெக்சாஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் பட்டப்படிப்பு பெற்றார் ஆர்த்தி பிரபாகர். மேலும், கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் பி.ஹெச்.டி முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் இவர். தொடர்ந்து அமெரிக்காவின் தேசியப் பொறியியல் அகாடமி, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் முதலானவற்றில் ஆர்த்தி பிரபாகர் கௌரவப் பதவிகள் வகித்து வருகிறார்.