அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தல், இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான போட்டி கட்சிகளுக்குள் நடைபெற்று வருகிறது.
குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையேதான் போட்டி இருக்கும் . இரு கட்சிகளும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான போட்டியில் மும்முரமாக களமிறங்கியுள்ளன.
வேட்பாளர் தேர்தல்:
ஜனநாயக கட்சியில் மீண்டும் ஜோ பைடன் போட்டியிட வேட்பாளராக விருப்பம் தெரிவித்துள்ளார். இவரை தவிர்த்து, மரியான் வில்லியம்சன், டீன் பிலிப்ஸ் ஆகியோரும் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, ஐ.நா.வுக்கான முன்னாள் தூதரும், இந்திய வம்சாவளியான நிக்கி ஹேலி அதிபர் தேர்தலில் போட்டியிட முயற்சித்து வருகிறார்.
குடியரசு கட்சியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி, அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகியதை தொடர்ந்து இவரும் டிரம்ப்-க்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
அதிபர் வேட்பாளர் டிரம்ப்பா?
இந்நிலையில், தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதனால் குடியரசு கட்சி சார்பில் அந்த நாட்டின் அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
தெற்கு கரோலினாவில் பரபரப்புரையின் போது டிரம்ப் பேசுகையில், கருப்பின மக்களும் என்னை போலவே பாதிக்கப்பட்டனர். அதன் காரணமாகவே தங்களில் ஒருவனாக பார்க்கின்றனர். இது குறித்து நிக்கி ஹாலே தெரிவிக்கையில், டிரம்ப் மனம் போன போக்கில் பேசி வருகிறார். தேர்தல் முடியும் வரை அவரிடமிருந்து இது போன்ற குழப்பங்களை ஏற்படுத்த கூடிய பேச்சுக்கள் அதிகம் வரும். டிரம்பால் ஒரு பொதுத்தேர்தலை கூட வெல்ல முடியாது என தெரிவித்தார்.
சவால்:
உட்கட்சி தேர்தலிலும் அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்புகளிலும் டிரம்ப் முன்னிலை வகித்து வரும் போதிலும், சட்ட ரீதியாக பல சவால்களை சந்தித்து வருகிறார். அவருக்கு எதிராக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்ற டிரம்ப் சதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு அவருக்கு பெரும் சவாலாக உள்ளது.