ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் பிதினே பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேரடியாக விமர்சித்துள்ளார். 


எதிர்க்கட்சித் தலைவர் மரணம்:


ரஷ்யாவில் புதினை எதிர்க்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, புதினுக்கு எதிராக ரஷ்யாவில் கிளர்ச்சியை தொடங்கிய, வாக்னர் கூலிப்படையின் தலைவர் எக்னி பிரிகோசின் விமான விபத்து ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்தார். 


அதனை தொடர்ந்து, புதினை கடுமையாக விமர்சித்து வந்த ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு சமீபத்தில் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில், சிறையில் இருந்தபோது அவர் சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. 


மரணம் ஏற்பட்டது எப்படி?


இதை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி மரணம் தொடர்பாக சிறை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “அலெக்ஸி நவல்னி தினந்தோறும் நடைபயிற்சி செல்வது வழக்கம். இந்தநிலையில், எப்போதும் போல நடைபயிற்சி சென்று வந்த நவல்னி, திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அவரை பரிசோதித்த மருத்துவ ஊழியர்கள் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து சிகிச்சை அளித்தனர். இருப்பினு, அவர் நீண்ட நேரமாக சுயநினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. 


சில மணிநேரத்தில் அலெக்ஸி நவல்னியின் மரணமடைந்ததாக சுகாதார பணியாளர்கள் உறுதி செய்தனர். மரணத்திற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்” என தெரிவித்தது. அலெக்ஸி நவல்னி நடைப்பயணத்திற்குப் பின் மயங்கி விழுந்து இறந்ததாக ரஷ்ய பெடரல் சிறைச் சேவை நேற்று தெரிவித்துள்ளது. மரணத்திற்கான காரணத்தை சிறை நிர்வாகம் வெளியிடவில்லை.






எதிர்க்கட்சி தலைவர் மரணத்திற்கு புதினே காரணம்: 


இந்தநிலையில், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் பிதினே பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேரடியாக விமர்சித்துள்ளார். அதில், “ ரஷ்ய அதிபர் புதினின் ஊழல்கள், மோசமான செயல்களுக்கு எதிராக துணிச்சலுடன் செயல்பட்ட நவல்னியின் மரணத்தில் பெரியளவில் சந்தேகம் எழுகிறது. புதின் தனது சொந்த மக்களுக்கு எதிராக பயங்கரமான குற்றங்களைச் செய்கிறார். நவல்னிக்கு என்ன நடந்தது என்பது புதினின் கொடுமைக்கு மேலும் சான்று. இதற்கு புதின்தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்” என்றார். 


அலெக்ஸியின் தாய் என்ன சொன்னார்?


நவல்னியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சிறை துறை வெளியிட்ட அறிக்கைகள் பொய் என  தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய அலெக்ஸின் தாய் லியுட்மிலா " என் மகன் உயிருடன் இருக்கும்போது நலமுடன் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக கூறினார். இப்போது திடீரென என்ன ஆனது என்றே தெரியவில்லை. அவனது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தோன்றுகிறது.” என தெரிவித்தார்.