Donald Trump: 100 சதவிகிதம் வரி விதிப்பேன் என பிரிக்ஸ் நாடுகளுக்கு, அமெரிக்காவின் அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை:
அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்க டாலரை தவிர்த்து அதற்கு மாற்றாக வேறு பணத்தை கொண்டு பரிவர்த்தனை மேற்கொள்ள முயலும் BRICS அமைப்பின் உறுப்பு நாடுகளை எச்சரித்துள்ளார். மேலும், இந்தியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் டாலரையே தொடர்ந்து பயன்படுத்துவோம் என உறுதியளிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
”100% வரி போடுவேன்” - ட்ரம்ப்
ட்ரம்பிற்கு சொந்தமான Truth Social என்ற சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் நின்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே BRICS நாடுகள் டாலரை விட்டு விலகிச் செல்ல முயல்கின்ற எண்ணம் முடிந்துவிட்டது. இந்த நாடுகள் புதிய BRICS நாணயத்தை உருவாக்கவோ அல்லது வலிமைமிக்க அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு எந்த நாணயத்தையும் ஆதரிக்கவோ மாட்டோம் என உறுதி அளிக்க வேண்டும். இல்லையெனில் 100% வரிகளை எதிர்கொள்வதோடு, அற்புதமான அமெரிக்கப் பொருளாதாரத்தில் விற்பனை செய்வதிலிருந்து விடைபெறலாம். அவர்கள் மற்றொரு ஏமாளியை தேடிச் செல்லலாம். சர்வதேச வர்த்தகத்தில் BRICS அமெரிக்க டாலரை மாற்றுவதற்கான வாய்ப்பு இல்லை, மேலும் முயற்சிக்கும் எந்த நாடும் அமெரிக்காவிடம் இருந்து விடைபெற வேண்டும்” என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பின் திட்டம் என்ன?
2009 இல் உருவாக்கப்பட்ட பிரிக்ஸ், அமெரிக்கா ஒரு பகுதியாக இல்லாத ஒரே பெரிய சர்வதேச குழு ஆகும். தென்னாப்பிரிக்கா, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை இதன் மற்ற உறுப்பினர்கள். கடந்த சில ஆண்டுகளாக அதன் உறுப்பு நாடுகளில் சில, குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனா, அமெரிக்க டாலருக்கு மாற்றாக அல்லது சொந்தமாக BRICS நாணயத்தை உருவாக்க முயல்கின்றன. பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டி சில்வா இது தொடர்பான யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். ஆனாலும், இந்த நடவடிக்கையில் இந்தியா இதுவரை பங்கேற்கவில்லை. இந்த நிலையில் தான், டாலருக்கு மாற்றான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மீது, 100 சதவிகித விரிகள் விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
டாலருக்கு மாற்றான பணத்தை பயன்படுத்துவது தொடர்பாக பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “"நாங்கள் டாலரை ஒருபோதும் குறிவைக்கவில்லை. அது நமது பொருளாதாரக் கொள்கை அல்லது அரசியல் அல்லது நமது மூலோபாயக் கொள்கையின் ஒரு பகுதி அல்ல. வேறு சிலருக்கு இருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.