Champions Trophy: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியை ஹைப்ரிட் மாடலில் நடத்த, பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.


ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி விவகாரம்:


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்நாட்டிற்கு செல்ல முடியாது என இந்திய அணி அறிவித்துள்ளது. இதன் காரணமாக போட்டியை ஹைப்ரிட் முறையில் நடத்துவது தொடர்பாக, அண்மையில் ஐசிசியின் ஆலோசனை நடைபெற்றது. அதில், மொத்த போட்டிகளையும் தங்கள் நாட்டிலேயே நடத்த வேண்டும் என பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்தது. ஆனால், ஹைப்ரிட் முறையில் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் சம்மதிக்காவிட்டால், போட்டிகளை நடத்தும் முழு உரிமையும் வேறுநாட்டிற்கு வழங்கப்படும் என ஐசிசி தெரிவித்தது. இதையடுத்து, தங்கள் நாட்டு அரசுடன் கலந்தாலோசிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒருநாள் அவகாசம் கோரியது.



ஹைப்ரிட் மாடலுக்கு ஓகே, ஆனால்..?


இந்நிலையில் தான் சாம்பியன்ஸ் டிராபி விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சற்றே இறங்கி வந்துள்ளது. அதன்படி, ”வரும் 2031ம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெற உள்ள அனைத்து ஐசிசி போட்டிகளுக்கும் ஹைப்ரிட் மாடலே தொடரும் என உறுதியளித்தால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டியை ஹைப்ரிட் மாடலில் நடத்த சம்மதம்” என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதாவது 2026ம் ஆண்டு இலங்கையுடன் சேர்ந்து டி20 உலகக் கோப்பை போட்டி, 2029ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டி மற்றும் 2031ம் ஆண்டு வங்கதேசத்துடன் சேர்ந்து ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் உரிமைகளை இந்தியா பெற்றுள்ளது. இந்த 3 போட்டிகளிலும் பங்கேற்க பாகிஸ்தான் இந்தியாவிற்கு வராது எனவும், அந்த அணிக்காக ஹைப்ரிட் மாடலை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பாகிஸ்தானுக்கு ஹோஸ்டிங் உரிமையை முழுமையாக வழங்காவிட்டால் சாம்பியன்ஸ் டிராபியை புறக்கணிப்போம் என்ற, முந்தைய நிலைப்பாட்டில் இருந்து பாகிஸ்தான் கணிசமாக இறங்கி வந்துள்ளது.


நிதிச்சலுகை கோரும் பாகிஸ்தான்


பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, ஹைப்ரிட் மாடலை ஏற்க நிதி சலுகைகளையும் கோரியுள்ளார். அதன்படி, ”ஐசிசி வாரியம் தனது நிதி சுழற்சியின் வருவாயை 5.75 சதவீதத்திலிருந்து அதிகரிக்க வேண்டும்” என்று பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் அவர் கூடுதல் ஹோஸ்டிங் கட்டணம் எதையும் கோரவில்லை.


சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை:


எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக லாகூர், ராவல்பிண்டி மற்றும் கராச்சி மைதானங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தயார்படுத்தி வருகிறது. இருப்பினும், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையிலான மோதலைக் கருத்தில் கொண்டு போட்டி தொடர்பான இறுதிமுடிவுகள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. பாகிஸ்தானின் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், இரு அணிகள் இடையேயான போட்டிகள் துபாயில் நடைபெறலாம்.


தற்போதைய நிலவரப்படி, சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெற உள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் 2012 முதல் இருதரப்பு கிரிக்கெட்டில் விளையாடவில்லை. இந்தியா கடைசியாக 2008 இல் ஆசிய கோப்பைக்காக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்தது.