ரஷ்யா மற்றும் உன்ரைன் இடையே போர் நீடித்து வரும் நிலையில், இவ்விரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்துவைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிரமான முயன்று வருகிறார். அதற்காக பலகட்ட பேச்சுவார்ததைகள் நடைபெற்றுள்ள நிலையில், நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


3 ஆண்டுகளுக்கும்  மேலாக தொடரும் போர் - அமெரிக்கா சமாதான முயற்சி


கடந்த 2022-ம் அண்டு பிப்ரவரி மாதம், உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை தொடங்கியது ரஷ்யா. அதைத் தொடர்ந்து, உக்ரைனும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவை எதிர்த்து இன்றுவரை போராடி வருகிறது. இதற்கிடையே, அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற பின், உக்ரைனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கடுமையாக சாடிய ட்ரம்ப், போர் நிறுத்தத்தை அவர் விரும்பவில்லை என குற்றம் சாட்டினார்.


இதற்கிடையே, ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டிவரும் ட்ரம்ப், ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை நிறுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதற்காக ஸ்டீவ் விட்காஃபை தூதராக நியமித்து, சவுதி அரேபியாவில், இரு நாட்டு பிரதிநிதிகளுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.


போர் நிறுத்தம் குறித்து செவ்வாயன்று முக்கிய அறிவிப்பு - ட்ரம்ப்


இப்படிப்பட்ட சூழலில், போர் நிறுத்தம் குறித்து பேசியுள்ள ட்ரம்ப், செவ்வாயன்று(18.03.25) ரஷ்ய அதிபர் புதினிடம் பேச உள்ளதாகவும், அதன் பிறகு, முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்பு இருப்பதாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.


போர் நிறுத்த பேச்சுவார்த்தையில், கடந்த வார இறுதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால், போர் நிறுத்தம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருதரப்பிலும், நிலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், இருதரப்பின் சொத்துக்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து பேசப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான், தற்போது ரஷ்யவின் பதிலை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


சரமாரி கேள்விகளை எழுப்பிய ரஷ்ய அதிபர் புதின்


இதனிடையே, கடந்த வாரம் இது குறித்து பேசிய ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்காவின் யோசனை சரியானதுதான், அதை நாங்கள் ஆதரிக்கிறோம், ஆனால் அது குறித்து விவாதிக்க வேண்டிய நிறைய கேள்விகள் உள்ளன என கூறினார்.


போர் நிறுத்தம் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று கூறிய அவர், இந்த போருக்கான மூல காரணங்களை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், இந்த போர் நிறுத்தம் எவ்வாறு பயன்படுத்தப்படும்? உக்ரைன் மீண்டும் படைகளை திரட்டி ஆயுதங்களை சேகரிப்பதற்கா? படைகளுக்கு பயிற்சி அளிக்கவா? இதை எவ்வாறு கண்காணிப்பது என சரமாரி கேள்விகளை புதின் எழுப்பியுள்ளார்.


அதோடு, சண்டை நிறுத்த உத்தரவை யார் விடுப்பார்கள் என்றும், எல்லையில் போர் நிறுத்த உடன்பாட்டை மீறிவது யார் என்பது குறித்த முடிவை யார் எடுப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் புதின். 


இந்த சூழலில், நாளை ரஷ்ய அதிபரிடம் ட்ரம்ப் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இத்தனை கேள்விகளை எழுப்பியுள்ள புதினுக்கு, ட்ரம்ப் என்ன விடை கொடுப்பார், அதன் மூலம் போர் நிறுத்தம் ஏற்படுமா என்தே தற்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.