அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர கூடுதல் வரிகளை விதித்த நிலையில், அதை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்திருந்தார். அந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு அதை மாற்றி வைத்துள்ளார். அன்று முதல் வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று தெரிவித்த அவர், அதற்குமேல் காலக்கெடுவை நீட்டிக்க மாட்டேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வரி விதிப்பு குறித்து ட்ரம்ப் கூறியத என்ன.?
அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு நாடுகள் தங்கள் மீது அதிகப்படியான வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டினார். அதிலும் குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகள் விதிக்கும் வரி அதிகப்படியாக உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
அதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிப்பதாக அறிவித்த ட்ரம்ப், ஒவ்வொரு நாட்டிற்குமான வரி எவ்வளவு என்பதை அறிவித்தார். பின்னர், சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கான வரி விதிப்பை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அதற்குள், அந்தந்த நாடுகள், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
அவர் விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், அந்த வரி விதிப்பை இந்த மாத இறுதி வரை நிறுத்தி வைப்பதாகவும், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வரி விதிப்பு அமலாகும் என்று கூறியுள்ளார் ட்ரம்ப். அதோடு, இந்த முறை காலக்கெடு நீட்டிக்கப்படாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அதோடு, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 25 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அறிவித்த நாடுகடுடன் சேர்த்து, ஜப்பான், தென் கொரியா, மியான்மர், லாவோஸ், தென்னாப்பிரிக்கா, கஜகஸ்தான், மலேசியா, துனிசியா, இந்தோனேசியா, போஸ்னியா, வங்க தேசம், செர்பியா, கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய 14 நாடுகளுக்கும் அதிக வரிகளை ட்ரம்ப் விதித்துள்ளார்.
தொடக்கத்திலிருந்து அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டுவரும் ட்ரம்ப்
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின், பல அதிரடிகளை ட்ரம்ப் அரங்கேற்றியதில், இந்த வரி விதிப்பும் ஒன்று. அதன்படி, பல்வேறு நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிப்பதாக, வரி சதவீதங்களை அறிவித்த ட்ரம்ப், மார்ச் 5-ம் தேதி பேசுகையில், ஏப்ரல் 2-ம் தேதி முதல் வரிகள் விதிக்கப்படும் என்று அறிவித்தார்.
பின்னர், ஏப்ரல் 5-ம் தேதி, அனைத்து இறக்குமதிகள் மீதும் 10 சதவீதம் அடிப்படை வரி என்ற அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து, ஏப்ரல் 9-ம் தேதி, ஒரு அறிவிப்பை வெளியிட்ட அவர், ஜூலை 9-ம் தேதி வரை பரஸ்பர வரி விதிப்பை நிறுத்தி வைப்பதாக கூறினார்.
இந்நிலையில், கடந்த 6-ம் தேதி, 10 - 12 நாடுகளுக்கு வரி விகிதங்கள் குறித்த கடிதம் அனுப்புவது துவங்கும் என்று கூறினார். இந்நிலையில், ஜூலை 7-ம் தேதி, பல நாடுகளுக்கு ஆகஸ்ட் 1-ல் வரி விதிப்பு அமலாகும் என கடிதம் அனுப்பினார்.
இப்படி, ஆரம்பம் முதலே, ஆக்ஷனில் இறங்காமல், அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல்வேறு நாடுகளையும் பதற்றத்திலேயே வைத்திருப்பதற்காக இப்படி செய்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால், அவர் நினைப்பது என்ன என்பது, அவருக்கு மட்டுமே தெரியும்.