நியூயார்க்கில் உள்ள இரட்டைக் கோபுரம் தாக்குதல் சம்பவத்தின்  இருபதாவது ஆண்டின் நினைவுத் தினத்தை முன்னிட்டு அமெரிக்கா மக்கள் துயரஞ்சலி செலுத்தி வருகின்றனர். அல்கொய்தா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதல் உலகளாவிய வரலாற்று சம்பவமாக கருதப்படுகிறது. மேலும், இதை உலகளாவிய வராலாற்று சம்பவமாக மாற்றியதில் அமெரிக்கா முக்கிய பங்கும் வகிக்கிறது.  இந்த தாக்குதலில் 3000-க்கும் அதிகமான மக்கள் மாண்டார்கள் என்பதைத் தாண்டி, பன்னாட்டு உறவுகளில் உள்ள அடிப்படை அரசியலை 9/11 கேள்வி கேட்பதாய் அமைந்தது. இந்த தாக்குதலை அமெரிக்கா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் தங்களுடைய  அஞ்சலியை பதிவு செய்து வருகின்றனர்.


இந்நிலையில் அந்த தாக்குதலின்போது உரிமையாளர் ஒருவரை அவருடைய நாய் காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க வர்த்தக மையத்தின் தாக்குதலில் உயிருடன் பிழைத்தவர்களில் ஒருவர் ஹிங்சன். இவர் அந்த கடைசி விநாடி பதற்றமான சூழலை ஒரு அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். அதில், "அன்று நான் உலக வர்த்தக மையத்திற்குள் இருந்தேன். திடீரென இரண்டு முறை பயங்கரமான வெடி சத்தம் கேட்டது. அதற்கு பின்பு கட்டடம் சற்று ஆடுவதை நான் உணர்ந்தேன்.




நான் இருந்த தளத்தில் இருந்து 18-ஆவது தளத்தில் அந்த விமானம் தாக்குதல் நடத்தியது. அதனால் எங்களுக்கு வெளியே என்ன நடந்தது என்று தெரியவில்லை. எனினும் இந்த கட்டடத்தை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அந்த சமயத்தில் நானும் என்னுடைய நாய் ரோஸ்லியும் பதற்றப்படாமல் 78 படிக்கட்டுகளை இறங்கி அக்கட்டடத்திலிருந்து வெளியே வந்தோம். நாங்கள் வெளியே வந்தவுடன் ஒரு பயங்கர சத்தம் கேட்டது. அப்போது அருகே இருந்தவர்கள் கூறியதை வைத்து இரண்டாவது டவர் கட்டடம் முழுவதுமாக இடிந்து கீழே விழுந்தது. அந்த சமயத்தில் ஏற்பட்ட கரும்புகை சூழலால் என்னால் சரியாக மூச்சு விடமுடியவில்லை.


அந்த சமயத்திலும் என்னுடைய நாய் ரோஸ்லி என்னை சரியாக அங்கு இருந்து வழிநடத்தி வெளியே கூட்டி சென்றது. அத்துடன் அருகே இருந்த என்னுடைய நண்பர் வீடு வரை என்னை அழைத்து சென்றது. எனக்கு கண் தெரியாதது இந்த சம்பவத்திலிருந்து தப்பிக்க இடையூறாக இல்லை. ஏனென்றால் அங்கு நடந்ததை என்னால் பார்வையில்லை என்றாலும் உணர முடிந்தது. அதனால் தான் நான் சரியான நேரத்தில் எந்தவித பதற்றமும் இல்லாமல் தப்பித்தேன்" எனக் கூறியுள்ளார். 




இந்த சம்பவத்தை அவர் ஒரு புத்தகமாகவும் எழுதியுள்ளார். அதாவது "Thunder Dog: The True Story of a Blind Man, His Guide Dog, and the Triumph of Trust." என்ற பெயரில் ஒரு புத்தக்கத்தை எழுதியுள்ளார். அமெரிக்க வர்த்தக மையம் இடிக்கப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் முடிந்தாலும் இந்தச் சம்பவம் மனித குலத்தை எப்போதும்  தீவிரவாதம் அச்சுறுத்தும் ஒரு நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் பல்வேறு நாடுகளும் கடுமையாக கண்டனம் தெரிவித்தது. இந்தத் தாக்குதல் தான் ஆஃப்கானிஸ்தான் நாட்டிற்குள் அமெரிக்க படைகள் நுழைய முக்கிய காரணமாக அமைந்தது. 


மேலும் படிக்க: ட்வின் டவர் தாக்குதலுக்கு ஒரு நாள் முன்பாக நான் அங்கு இருந்தேன் - லியாண்டர் பயஸ்