Birds Sleep: மரத்தின் மீது தூங்கும் போதும் கூட பறவைகள் கீழே விழாததற்கு அதன் உடல் வடிவமைப்பே காரணமாக உள்ளது.
இன்றியன்மையாத தூக்கம்:
மனிதன் உள்ளிட்ட எந்தவொரு உயிரினத்தின் வாழ்விலும் தூக்கம் மிக முக்கியமானது. ஆனால், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் தூக்க முறைகள் மற்றும் நேரம் உள்ளிட்டவை வேறுபட்டவை. அந்த வகையில் பறவைகள் மரங்களில் உறங்கும் போதும் கூட கீழே விழாதது எப்படி என்பதை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதற்கான பதிலை இந்த தொகுப்பின் மூலம் நீங்கள் அறியலாம்.
தூங்கும் முறை:
ஒருவர் ஆழ்ந்து உறங்கும் போது, அவர் சுயநினைவில் இருப்பதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், பல முறை படுக்கும் அமைப்பை மாற்றும்போது, தங்களை அறியாமலேயே நாம் படுக்கையில் இருந்து வெளியேறுகிறோம். சிலர் பெரிய வசதியான கட்டிலில் படுக்கும்போது கூட, உருண்டு சென்று கீழே விழுவது எல்லாம் சகஜமாக நடக்கும் விஷயமாக உள்ளது. ஆனால் பக்கவாட்டில் எந்த வசதியும் இல்லாத ஒரு கிளையின் மீது உறங்கும்போது கூட, பறவைகள் கீழே விழுவதில்லை. காரணம் அவ மரக்கிளைகள் மீது படுத்து உறங்குவதில்லை, கிளையின் மீது நின்றபடியே உறங்குகின்றன. படுத்து உறங்கினாலே உருண்டு புரள்கிறோம், நின்றபடியே தூங்கும்போது விழாதது எப்படி என உங்களுக்கு இப்போது கேள்வி எழலாம். அதற்கான பதில் கீழே வழங்கப்பட்டுள்ளது.
பறவைகள் எப்படி தூங்குகின்றன?
பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் கிடைத்த தகவலின்படி, பறவைகளின் தூக்கம் மிகக் குறைவு. பறவைகளின் தூக்கம் 10 வினாடிகள் மட்டுமே நீடிக்கும். அதாவது பறவைகள் குறுகிய கால தூக்கத்தையே மேற்கொள்ளும். இதுமட்டுமின்றி, பறவைகள் சில சமயங்களில் ஒரு கண்ணைத் திறந்து தூங்கும். உறங்கும் நேரத்தில் மூளையின் ஒரு பகுதி அதாவது இடது அரைக்கோளம் அல்லது வலது அரைக்கோளம் சுறுசுறுப்பாக இருக்கும் வகையில் தங்களது மூளையைக் கட்டுப்படுத்துகின்றன. பறவைகள் தூங்கும் போது கூட ஆபத்துகளில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள தாயர் நிலையில் இருக்கும். அதாவது தூங்கும் போது கூட தன்னை யாரேனும் நெருங்கினாலும், அதனை உணரும் திறனை பறவைகள் பெற்றுள்ளன.
பறவைகள் ஏன் விழுவதில்லை?
உறங்கும் போது மரக்கிளைகளில் இருந்து விழாமல் இருப்பதற்கான முதல் காரணம் அவற்றின் மூளையின் ஒரு பகுதி விழித்திருப்பதே என்பதை சொன்னோம். இரண்டாவது காரணம் பறவகளின் கால்களின் வடிவமைப்பு. எந்தப் பொருளையும் பற்றிக்கொள்ளும் திறனை இயற்கை அவற்றிற்கு வழங்கியுள்ளது. அதன்படி, தூங்குவதற்காக ஒரு மரத்தின் மீது அமர்ந்திருக்கும் போது, பறவைகளின் கால் நகங்கள் கிளைகளைப் பற்றிக் கொள்கின்றன. தூக்கத்திலிருந்து விழித்து பறவைகளே தங்களது கால்களை மீண்டும் அசைக்கும் வரை அவை அந்த பிடி அகலாது. அதாவது தூங்கும்போது பறவைகளின் கால் பிடி ஒரு வகையான பூட்டாக செயல்படுகிறது. இந்த வகை பூட்டினால், கிளி போன்ற பறவைகள் கிளையில் ஆடும் போதும் கூட அசராமல் தூங்கும் என்பதே ஆச்சரியம் நிறைந்த உண்மையாகும்.