மத்திய கிழக்கு நாடான துருக்கியில் நேற்று முன்தினம் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி 9 ஆயிரத்தி 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என கூறப்படுகிறது.


கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் ஐந்து நிலநடுக்கம் ஏற்பட்டதில்  நிலைமை மிக மோசமாக மாறியுள்ளது. இந்த மோசமான நிலைநிடுக்கத்தை சமாளிக்க துருக்கிக்கு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.


அதன்படி, ஆபரேஷன் தோஸ்த் மூலம் துருக்கி மற்றும் சிரியாவுக்கு தற்காலிக மருத்துவ முகாம்கள், மருந்துகள், மீட்பு படைகள் ஆகியவை அனுப்பியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஜெய்சங்கர், "ஒவ்வொரு நாளும் நாம் புவிசார் அரசியல் சூழ்நிலைகளில் ஏற்ற தாழ்வுகளைக் காண்கிறோம்.


ஆனால், இந்தியா பல நாடுகளுடன் நிலையான உறவுகளைக் கொண்டுள்ளது. 'வசுதெய்வ குடும்பம்' என்ற எங்கள் கொள்கையின்படி இந்தியா என்றென்றும் மனிதகுலத்திற்காக துணை நிற்கிறது" என்றார்.


இந்தியாவுடன் துருக்கி நல்லுறவை பேணவில்லை என்றாலும் அதற்கு அனுப்பப்பட்டுள்ள உதவி குறித்து ஜெய்சங்கரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது, அவர் இந்த பதிலை அளித்தார்.


துருக்கியின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை ஏற்றிச் செல்லும் இந்திய விமானப்படையின் நான்காவது சி17 விமானம் இன்று அதானாவில் தரையிறங்கியது.


இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "தற்காலிக மருத்துவமனையை அமைப்பதற்கான மீதமுள்ள பாகத்துடன் நான்காவது இந்திய விமானப்படை விமானம் [துருக்கிக்கு சென்றுள்ளது. இதில் இந்திய ராணுவ மருத்துவக் குழுவைச் சேர்ந்த 54 உறுப்பினர்களும், முகாமை அமைப்பதற்கான மருந்துகள் மற்றும் பிற உபகரணங்களும் அடங்கும்" என பதிவிட்டுள்ளார்.


முன்னதாக, நிதி உதவி வழங்கியதற்காக இந்தியாவுக்கு துருக்கி நன்றி தெரிவித்தது. இந்தியாவை நண்பர் என குறிப்பிட்டுள்ள இந்தியாவுக்கான துருக்கி தூதர் ஃபிரத் சுனெல், ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் என நெகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.






இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "தோஸ்த் என்பது துருக்கிய மற்றும் இந்தியில் பொதுவான வார்த்தை. நமக்கு ஒரு துருக்கிய பழமொழி உண்டு. "ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்" என்பதுதான் அது. மிக்க நன்றி இந்தியா" என பதிவிட்டுள்ளார்.