கடலுக்கடியில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை காண சென்று 5 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் அடுத்த பயணத்திற்கான விளம்பரங்களை ஓஷன்  கேட் நிறுவனம் அறிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டைட்டானிக் கப்பல்:


கடந்த 1912ம் ஆண்டு நேர்ந்த கோர விபத்தில் கடலுக்கு அடியில் மூழ்கியது டைட்டானிக் கப்பல். அதைதொடர்ந்து, பல ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு கடந்த 1985ம் ஆண்டு, சர்வதேச கடல் எல்லையில் 12 ஆயிரத்து 400 அடி ஆழத்தில் டைட்டானிக் கப்பலின் சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து, அந்த சிதிலங்களை சுற்றி பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றன. 


கோர விபத்து:


இந்த நிலையில் தான், ஓஷன் கேட் எனும் நிறுவனம் பொதுமக்களை கடலுக்குள் அடியில் அழைத்துச் சென்று டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை சுற்றிக்காட்டுவதாக அறிவித்தது. இதைநம்பி தலா 2 கோடி ரூபாயை கட்டணமாக செலுத்தி 5 பேர் சுற்றுலா செல்ல முன்பதிவு செய்தனர். அதன்படி, இரண்டு வாரங்களுக்கு முன்பு சிறிய அளவிலான நீர்மூழ்கி கப்பலில், சுற்றுலா சென்ற அந்த குழு எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இதனால், அந்த கப்பலில் இருந்த 5 பேரும் உயிரிழந்தனர். இது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 


குவியும் கண்டனங்கள்:


தரமான பொருட்களை கொண்டு அந்த கப்பல் உருவாக்கப்படவில்லை எனவும், போதுமான மற்றும் முறையான அறிவியல் பூர்வமான பரிசோதனைகளை ஓஷன் கேட் நிறுவனம் மேற்கொள்ளவில்லை என்பதும் விபத்திற்கு பிறகு தான் தெரிய வந்துள்ளது. இதனால், அந்த நிறுவனத்தை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், ஓசியன் கேட் நிறுவனம் செய்துள்ள ஒரு விளம்பரம் தான், பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஓசியன் கேட் விளம்பரம்:


5 பேர் பலியான அதிர்வலைகள் கூட இன்னும் மக்களிடையே அடங்காத நிலையில், மீண்டும் அடுத்த ஆண்டு டைட்டானிக் கப்பலை சுற்றிப் பார்ப்பதற்கான பயணம் மேற்கொள்ளப்படும் விருப்பம் உள்ள 17 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதை தான தற்போது நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


விளம்பரம் சொல்வது என்ன?


இணையதளத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் விவரங்களின்படி, ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலை காணும் சுற்றுப்பயணத்திற்கு பயணத்தொகை சுமார் ரூ.2 கோடிக்கு மேலாகிறது. ஒரு பயணம் அடுத்த ஆண்டு ஜூன் 12ல் தொடங்கி ஜூன் 20 வரையிலும் மற்றொன்று ஜூன் 21 தொடங்கி ஜூன் 29 வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு “ முதல் நாளன்று பயணிகள், கடலோர நகரமான செயின்ட் ஜான்ஸுக்கு வர வேண்டும். அதன் பிறகு தங்களுடன் பயணம் செய்யும் குழுவினரை, ஓஷன் கேட் குழு சந்தித்து கப்பலில் ஏற்றிச் செல்லும். அக்குழு நீர்மூழ்கியில் டைட்டானிக் புதையுண்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்படும். அங்கிருந்து டைட்டானிக் மூழ்கிய இடத்திற்கான 400 நாட்டிகல் மைல் பயணத்தை தொடங்கும் போது, கப்பலில் வாழ்க்கைமுறையைப் குறித்து பயணிகள் உணர்ந்திருப்பார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.