ஊழியர்கள் பெற்றெடுக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.5.66 லட்சம் நிதியுதவி கொடுக்கப்படும் என சீனாவை சேர்ந்த தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக ஒரு பில்லியன் யுவான் அதாவது ரூ.1,130 கோடியை ஒதுக்கியுள்ளது.


ரூ.1,130 கோடி ஒதுக்கீடு:


சீனாவைச் சேர்ந்த பிரபல தனியார் சுற்றுலா நிறுவனமான டிரிப்.காம், தங்களது ஊழியர்களுக்காக ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜுலை 1ம் தேதி முதல் தங்களது நிறுவன ஊழியர்கள் பெற்றெடுக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.5.66 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இதற்காக மொத்தமாக 1 பில்லியன் யுவான்கள் அதாவது இந்திய மதிப்பில் ஆயிரத்து 130 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீனாவில் மக்கள் தொகை பெருக்கம் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் அந்நாட்டை சேர்ந்த பெருநிறுவனங்களில் ஒன்றான டிர்ப்.காம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சீனாவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இத்தகைய அறிவிப்பை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.


டிரிப்.காம் நிறுவனம்:


40 கோடி பயனாளர்களை கொண்ட உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சுற்றுலா நிறுவனம் தான் டிரிப்.காம். அந்த நிறுவனம் தான்,  உலகெங்கிலும் உள்ள தங்களது ஊழியர்களுக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு, ஆண்டுதோறும் தலா 10,000 யுவான் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.


சீனா சந்திக்கும் பிரச்னை:


உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் கடந்த 1980 முதல் 2015ம் ஆண்டு வரை குழந்தை பெறுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாட்டின் வளர்ச்சிக்கு இந்த நடவடிக்கை உதவும் என சீனா கருதிய நிலையில், தற்போது அந்த நாட்டிற்கே அது பெரும் பிரச்னயாக உள்ளது. இதுதொடர்பாக பேசிய ஆராய்ச்சியாளர்கள் “சீனா ஒரு பணக்கார நாடாக ஆவதற்கு முன்பே, வயதாகி விடும்" என்று எச்சரித்தனர்.


அதனை உண்மை என உணர்த்தும் விதமாக தான், சீனாவில் தற்போது இளம் வயது பணியாளர்கள் கிடைப்பது அரிதாகியுள்ளது. முதியோர்களை கவனிக்க இளம்வயதினர் அதிகம் இல்லாததால், அவர்களுக்காக அரசாங்கம் சார்பில் அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் பல உள்ளூர் அரசாங்கங்கள் கடனாளியாக மாறியுள்ளன.


அச்சப்படும் மக்கள்:


ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகள், நவீன உலகின் சிந்தனைகள் ஆகியவற்றால் சீன இளைஞர்கள் இடையே குழந்தை பெற்றுக்கொள்வதற்கான தயக்கம் நீண்ட காலமாக நிலவி வருகிறது. அதோடு, கொரோனா பரவலின் போது ஏற்பட்ட பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, சீனாவை சேர்ந்த பலரும் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம்  காட்டவே மறுக்கின்றனர். கடந்த 2021ல் 7.52 ஆக இருந்த குழந்தை பிறப்பு  விகிதம், கடந்த ஆண்டில் 6.77 ஆக குறைந்து வரலாறு காணாத அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது.


குவியும் சலுகைகள்:


தற்போது நிலவும் சூழலின் பின் விளைவுகளை கருத்தில் கொண்டு,  இளைஞர்கள் இடையே குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு மாகாண அரசுகள், பெற்றோருக்கு சிறப்பு நிதியுதவியும் வழங்கி வருகிறது. அதனை தொடர்ந்து, அரசுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, பல தனியார் நிறுவனங்களும் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு சிறப்பு நிதியுதவியை அறிவிக்க தொடங்கியுள்ளன.