அமெரிக்க அதிபர் ஜோ-பைடன் நமத்துப்போன சாக்ஸ் பொம்மை என்று அமெரிக்கா தொழிலதிபர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க மக்களை அதிபர் பைடன் மூடர்களாக நினைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, மின்சார வாகனங்கள் உற்பத்தி தொடர்பாக உள்நாட்டில் 7 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய இருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், ஜெனரல் மோட்டார்ஸ் முதன்மை தலைமை அதிகாரி மேரி பாரா (Mary Barra), அமெரிக்க அதிபர் ஜோ-பைடனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜோ- பைடன் தனது ட்விட்டரில், "எதிர்வரும் ஆண்டுகளில் மின்சார வாகனங்கள் உற்பத்தி மையமாக அமெரிக்கா மாறும். முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்நாட்டில் அதிகமான எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. மின்சார வாகனங்கள் தயாரிப்பில் ஜெனரல் மோட்டார்ஸ், போர்ட் ஆகிய நிறுவனங்களின் பங்கு அளப்பரியது" என்று பதிவிட்டார்.
அதிபரின் இந்த கருத்துக்குப் பதிலளித்த ட்விட்டர் பயனர் ஒருவர், " "பைத்தியக்காரத் தனம் உச்சநிலையை அடைந்துள்ளது... இத்தகைய பொய்யான செய்திகளைப் பரப்புவதை நினைத்து, ஜோ-பைடன் மற்றும் மேரி பாரா வெட்கித் தலைகுனிய வேண்டும். இத்தகைய குறுகிய மனப்பான்மையுடன் இருக்கலாகாது" என்று பதிவிட்டார். மேலும், தனது ட்விட்டர் பதிவை எலன் மாஸ்க் ட்விட்டர் கணக்குக்கும் டேக் செய்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த எலன்,"அமெரிக்க அதிபர் ஜோ-பைடன் நமத்து போன கைகாட்டிப் பொம்மை" என்று பதிவிட்டார்.
மின்சார வாகனங்கள் உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் கோலோச்சி வருகிறது. இருப்பினும், அமெரிக்க ஊடகங்களும், அரசு அதிகாரமும் தமது போட்டியாளர்களான ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் போர்ட் ஆகிய நிறுவனங்களை முதன்மைப்படுத்தி வருவதாக மாஸ்க் குற்றஞ்சாட்டி வருகிறார். போட்டியாளர்கள் ஊடகங்கள் வாயிலாக மக்களின் மனவுலகில் கருத்துகளைத் திணித்து, உண்மைகளைத் திரித்து கூறி வருவதாகவும் கருதுகிறார்.
கடந்த காலங்களில் பல்வேறு சமயங்களில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை மஸ்க் நேரடியாக தாக்கி பேசியுள்ளார். முன்னதாக, சிஎன்பிசி செய்தி நிறுவனம், 7 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டின் மூலம் 2025ல் ஜெனெரல் மோட்டார்ஸ் நிறுவனம், டெஸ்லாவை ஓரங்கட்ட முயற்சித்து வருகிறது" என்று தெரிவித்தார்.
ஆனால், 2021ம் நிதியாண்டில் நான்காவது காலாண்டில் அந்நிறுவனம் வெறும் 26 மின்சார வாகனங்களை மட்டும்தான் விற்பனை செய்துள்ளது என்று சுட்டிக் காட்டிய மஸ்க், முயற்சி செய்தால் அடுத்த காலண்டில் 27 வாகனங்கள் விற்க முயற்சிக்கலாம். அதற்கான, சாத்தியக் கூறுகள் உண்மையில் தென்படுகிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.