மாதவிடாய் வலியால் எடுக்கும் விடுமுறையை பள்ளிகள் சரியான காரணமாக அங்கீகரிக்க வேண்டும் என குரல் கொடுத்துள்ளார் ஒரு தந்தை.


மார்கஸ் அலெய்ன், அமெரிக்காவின் கார்ன்வால் மாகாணத்தின் செயின்ட் ஆஸ்டல் பகுதியில் வசிக்கிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களில் இஸ்ஸி என்ற மகளுக்கு மாதவிடாய் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பள்ளிக்குச் செல்லவில்லை. அப்போது பள்ளியில் இருந்து தொடர்புகொண்டு இஸ்ஸி ஏன் வரவில்லை என்று தந்தையிடம் கேட்டுள்ளனர். அதற்கு மார்கஸ், எனது மகளுக்கு கடுமையான வயிற்றுவலி. மாதவிடாய் வலியால் அவர் துடித்தார். அதனாலேயே வரவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், பள்ளி சார்பில் இதை சரியான காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதலால் பள்ளி இந்த விடுமுறை அப்ரூவ் செய்யாது எனக் கூறியுள்ளனர்.


இது மார்கஸுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்துள்ளது. மார்கஸ் அலெய்ன், ராயல் நேவியில் மருத்துவப் பணியில் இருந்தார். மேலும், பிளாக் வாய்சஸ் கார்ன்வால் என்ற அமைப்பின் துணைத் தலைவராகவும் இருக்கிறார். இந்நிலையில், பள்ளியின் பதிலால் அதிர்ந்த அவர் தனக்கு பள்ளியின் மாணவர் நலன் ஆலோசகருடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டியுள்ளார். ஆனால் அதற்கு எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த மார்கஸ் தனது மனைவி ஜோவுடன் இணைந்து ஆன்லைனில் பெட்டிஷன் ஒன்றை உருவாக்கினார்.




அதில் அவர் கூறியிருப்பதாவது, ”நான் துணிச்சலான, வேகமான, வலிமையான மூன்று பெண் குழந்தைகளின் தந்தை. எனது மூத்த மகள் மேல்நிலைப் பள்ளியில் பயில்கிறார். இந்தக் கடிதத்தை நான் கல்வித்துறைக்கு எழுத வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது ஒரு வேதனை. எனது மகள் மட்டுமல்ல நாட்டில் உள்ள மற்ற சிறுமிகளின் மாதவிடாய் வலியும் இப்படித்தான் கண்டுகாணாமல் அக்கறையற்ற போக்குடன் அணுகப்படுகிறது. 


மாதவிடாயை அனுபவிக்கும் பெண்கள் அனைவருமே எப்போது ஒரு முறையாவது டிஸ்மெனோரியா எனப்படும் பீரியட்ஸ் பெயினை அனுபவித்திருப்பார்கள். இதற்கு உலகம் முழுவதும் சுடு தண்ணீர் ஒத்தடம், பெயின் கில்லர் என சில வைத்திய முறைகள் உள்ளன. கடுமையான வலியை எதிர்கொள்ளும் சூழலில் ஒரு மாணவி விடுப்பு எடுத்தால் அதை அங்கீகரிக்க மாட்டோம் எனக் கூறுவது பாகுபாட்டின் உச்சம். இது ஆணாதிக்கப் போக்கு. இதனை எதிர்த்தும், பெண் பிள்ளைகளின் உடல், மன நலன் பள்ளிகளில் பேணப்பட வேண்டும், மாதவிடாய் விடுமுறை அங்கீகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நான் போராட்டத்தை முன்னெடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


அவரது ஆன்லைன் பெட்டிஷனுக்கு 25,000-க்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் இது பள்ளிகளில் மட்டுமல்ல பணியிடங்களிலும் மதிக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.