ரஷ்யா - உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான போர்ப் பதற்றத்தால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை கணிசமாக உயர்ந்துள்ளது.


சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ஆரம்ப காலத்தில் இருந்தே உரசல் இருந்து வந்தது. 1949-ல் அமெரிக்கா சார்பில், நேட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த நேட்டோ அமைப்பில் இணைந்துள்ள நாடுகளின்மீது பிற அந்நிய நாடுகள் படையெடுத்தால், சக உறுப்பு நாடுகள் சம்பந்தப்பட்ட நாட்டுக்கு உறுதுணையாகப் படையெடுப்பை மேற்கொள்ளும். இந்த பாதுகாப்பு அம்சத்தாலும், பலம்மிக்க ரஷ்யாவை எதிர்க்கவும் நேட்டோவில் இணைய உக்ரைன் நேட்டோவில் இணைய ஆர்வம் காட்டியது. 


இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரஷ்யா, கிழக்கு எல்லைப் பகுதியில் தன்னுடைய படைகளைக் கொண்டு வந்து நிறுத்தியது. சுமார் 1,50,000 பேர் அங்கே குவிக்கப்பட்டனர். கூடவே மருத்துவ உபகரணங்கள், அதிநவீன பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் ஆகியவற்றையும் ரஷ்யா வைத்துள்ளதால் அங்கே போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. அதேநேரத்தில் கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகள் தொடர்ந்து உக்ரைன் அரசுக்கு எதிராகப் போராடினர். அவர்களுக்கு ஆயுத உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை ரஷ்யா செய்து வருகிறது. 




இதைத் தாண்டி அமெரிக்கா, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து வருகிறது. போர் எதையும் நடத்தவில்லை என்று தொடர்ந்து புடின் கூறிவருகிறார். 


உக்ரைன் இன்னமும் நேட்டோவில் இணையவில்லை என்பதால், அங்கு நேட்டோ படைகளை அனுப்பமுடியாது. அதனால், நேட்டோ உறுப்பினர்களாக இருக்கும் உக்ரைனுக்கு அண்டை நாடுகளான எஸ்தோனியா, லிதுவேனியா, போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க ஆதரவுப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 


இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 96.7 டாலராக உயர்ந்துள்ளது. கடந்த 2014 செப்டம்பர் மாதத்தில் இருந்ததே அதிகபட்ச விலையாக இருந்த நிலையில், தற்போது விலை உயர்ந்துள்ளது. 




கடந்த டிசம்பர் 2021-ல் இருந்து எண்ணெய் விலை சுமார் 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. அப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 69.5 டாலராக இருந்தது. இத்தகைய போக்கால் பங்குச்சந்தையில் பங்குகள் சரிவதும் நடந்துவருகிறது. அதேபோல இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது. 


இந்தியா தன்னுடைய கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்துக்கும் மேலாக இறக்குமதியையே நம்பியுள்ளது. ஏற்கெனவே கொரோனாவால் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ரஷ்யா- உக்ரைன் போர்ப் பதற்றம் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளது.