உலகம் முழுவதுமே கொரோனா தொற்று வெவ்வேறு வடிவங்களில் மாறி மாறி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன்மூலம் ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, லேம்டா, ஒமிக்ரான் திரிபுகள் வரிசையில் அடுத்தது என்ன? தொற்றுக்கு முடிவு வருமா என்று கேள்வி எழுந்துள்ளது.
ஒமிக்ரான் தொற்று வேகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஏற்கெனவே அதன் வீரியமும் தாக்கமும் முந்தைய கொரோனா திரிபுகளை விடக் குறைவாக இருந்தது. பல்வேறு நாடுகள், மக்களுக்கு வெவ்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், பெருந்தொற்றுக் காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக நம்மில் பலர் நினைக்க ஆரம்பித்துவிட்டோம்.
ஆனால் அது உண்மையில்லை. மக்கள் ஒமிக்ரான்தான் கொரோனா வைரஸின் கடைசித் திரிபு என்று நினைத்துவிட வேண்டாம் எனவும், உங்களுடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தொற்றுக் காலமும் பரவும் அபாயமும் இன்னும் முடிந்துவிடவில்லை. தடுப்பூசி குறைவாகவே செலுத்தப்பட்ட வளரும் நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவலாம். இதன்மூலம் வளர்ந்த நாடுகளில் விநியோகச் சங்கிலி, பயணத் திட்டங்கள், சுகாதாரம் ஆகியவையும் பாதிக்கப்படலாம் என்றும் நிபுணர்கள் சொல்கின்றனர்.
புது எல்லையை வகுக்கும் கொரோனா
இவை அனைத்துக்கும் முன்னதாக, ஒமிக்ரான் அலை முடிய வேண்டியது முக்கியம். அதேபோல ஒமிக்ரானுக்குப் பிறகு அடுத்த திரிபு உருவாகாது என்று அடித்துச் சொல்ல முடியாது என்கிறார் அமெரிக்க யேல் மருத்துவக் கல்லூரியின் தொற்று நோயியல் பேராசிரியர் அகிகோ இவாசகி. அவர் மேலும் கூறும்போது, "கொரோனா வைரஸ் ஒவ்வொரு சில மாதங்களுக்கும் ஒருமுறை இன்னொரு புதிய எல்லையை வகுக்கிறது. டெல்டா வைரஸுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறனை நாம் கொண்டாடிக் கொண்டிருந்தபோது ஒமிக்ரான் உருமாற்றம் ஏற்பட்டு, இன்னொரு புதிய எல்லை வகுக்கப்பட்டது" என்கிறார்.
கொரோனாவுடன் தொடர்ந்து வாழ நாம் முயற்சித்துக்கொண்டே இருக்க வேண்டி உள்ளது. காய்ச்சலுக்கு எதிரான மருந்துகள் விற்பனை சந்தையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றது. தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன. நிமிடங்களில் மேற்கொள்ளும் வகையில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் இவற்றைக் கொண்டு சூழல் கட்டுக்குள் இருப்பதாக நினைத்துவிடக் கூடாது என்கின்றனர் அறிவியலாளர்கள்.
பெரும்பாலான வளர்ந்த, பணக்கார நாடுகள் பெருந்தொற்று நோயை உள்ளூர் அளவில் (pandemic to endemic) முடிவுக்குக்கொண்டு வந்துள்ளன. அதே நேரத்தில் அது நீடிக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. அதே நேரத்தில் தொற்றுநோயின் பொருளாதார மற்றும் அரசியல் தாக்கங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
கொரோனா நம்முடனேயே இருக்குமா?
ஹூஸ்டன் பேய்லர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பீட்டர் ஹோட்டஸ் கூறும்போது, "ஒமிக்ரான் மிதமான வைரஸ் என்று ஏராளமான மகிழ்ச்சிகரமான பேச்சுகள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒமிக்ரான் உயிருள்ள தடுப்பூசியாகச் செயல்பட்டு, பெருந்திரள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது முற்றிலும் சரியானது அல்ல" என்கிறார்.
வைரஸ் ஒட்டுமொத்தமாகப் போய்விடாது என்றே நிபுணர்கள் நம்புகின்றனர். அதற்கு பதிலாக புதிதுபுதிதாக தொற்று அலைகள் உருவாவது தொடரும். ஒவ்வொரு முறையும் நோய்க் கிருமி பிரதி எடுக்கும்போது உருமாற்றம் நடந்துகொண்டே இருக்கும் என்கின்றனர்.
சியாட்டில் தொற்றுநோய் நிபுணரான ட்ரெவர் பெட்ஃபோர்ட் கூறும்போது, "அமெரிக்காவில் 20 முதல் 25 சதவீத ஒமிக்ரான் தொற்று மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் உலகம் முழுக்க இதே நிலைதான்.
குறைவான புள்ளிவிவரம்
அமெரிக்காவில் ஜனவரி மத்தியில் சராசரியாக 8 லட்சம் பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டது. இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 30 லட்சமாக அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் ஆகவில்லை. ஏனெனில் நிறையப் பேர் அதிகாரப்பூர்வ கொரோனா தொற்று புள்ளிவிவரத்துக்குள் வருவதில்லை. அவர்கள் அரசிடமோ, தனியாரிடமோ பரிசோதனை செய்யாமல், சுயமாகப் பரிசோதனை செய்து கொள்கின்றனர். அதேபோல ஏற்கெனவே கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று வராது என்பதில் உண்மையில்லை" என்கிறார்.
கொரோனாவை எதிர்ப்பதில் தடுப்பூசி முக்கியப் பங்காற்றுகிறது. உலகம் முழுவதும் 62 சதவீத மக்கள் குறைந்தபட்சம் ஒரு 1 தவணை தடுப்பூசியைச் செலுத்தி உள்ளனர். இது 75 சதவீதமாக அதிகரிக்க குறைந்தபட்சம் 5 மாதங்கள் ஆகக்கூடும். எனினும் ஒன்று அல்லது இரண்டு தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிரான போரில் போதாமையை வெளிப்படுத்தும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. பூஸ்டர் தடுப்பூசி ஆன்டிபாடிகளை உருவாக்குவதிலும் நோய் எதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்துவதையும் சிறப்பாகச் செயலாற்றும் என்று கூறப்படுகிறது.
சீனாவின் சினோவேக் தடுப்பூசி உள்ளிட்ட பாரம்பரியமான தடுப்பூசிகள் ஒரு தவணை போதிய செயல்திறனுடன் இருப்பதில்லை. அந்த வகையில் குறைந்தபட்சம் இரண்டு தவணை போடப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளைச் செலுத்தினால் வைரஸை எளிதில் கட்டுப்படுத்த முடியும்.
4-வது கொரோனா தடுப்பூசி
"ஒமிக்ரான் வைரஸில் சிறப்பு சுவாசக் கூறுகள் அதிகமாக இருப்பதால், அது நீடித்த நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே பெருந்தொற்று முடிவுக்கு வரும் என்று நம்புவது சரியல்ல. அதனால் புதிய கொரோனா உருமாற்ற வைரஸுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். புதிய திரிபுகளைக் கட்டாயம் தவிர்க்க முடியாது" என்கிறார் தென்னாப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் சிஇஓ க்லெண்டா கிரே தெரிவித்துள்ளார்.
அடுத்த 6 மாதங்களில் பெரும்பாலான நாடுகள் 4-வது கொரோனா தடுப்பூசிக்குத் தயாராகி விடும் என்று கூறப்படுகிறது. இஸ்ரேலில் ஏற்கெனவே 4வது தவணை தடுப்பூசி திட்டம் தொடங்கிவிட்டது அமெரிக்காவில் அதிக பாதிப்புக்கு ஆளாவோருக்கு 4வது தவணை தடுப்பூசி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியா, பிற நாடுகளைப் போல பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்தையே இதுவரை ஏற்கவில்லை.
தனி வழியில் சீனா, ஹாங்காங்
பெரும்பாலான உலக நாடுகள் கோவிட் தொற்றுடன் வாழப் பழகிவிட்ட நிலையில், சீனாவும் ஹாங்காங்கும் கொரோனா தொற்றைத் தங்கள் நாடுகளில் இருந்து முற்றிலுமாக நீக்க விரும்புகின்றன. 2021-ல் பெரும்பாலும் வைரஸ் இல்லாமலேயே அந்நாடுகள் வாழ்ந்துவிட்ட நிலையில், தற்போது அப்பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இதற்காக எல்லைப் பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை சீனாவும் ஹாங்காங்கும் விதித்துள்ளன. இது 2022 கடைசி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும் தொற்றுநோயின் ஆரம்பத்தில் நாடுகளில் பெரும்பாலான பகுதிகளில் செய்ததைப் போல, வைரஸை முற்றிலுமாக அகற்றுவது இனி சாத்தியமில்லை.
ஒமிக்ரான் காரணமாகத் தொழிலாளர்கள் நோயால் பாதிக்கப்பட்டதாலும், கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாலும் உலகளாவிய அளவில் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இது உலகின் பெரும்பாலான பொருட்கள் தயாரிக்கப்படும் ஆசியக் கண்டத்தில் அதிகமாக உள்ளது. இதனால், நுகர்வோர் விலை உயர்வு பற்றிய கவலைகள் எந்த நேரத்திலும் மறைந்துவிட வாய்ப்பில்லை. கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் சீனாவின் தீவிரமான நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
பெரும்பாலான நாடுகள், பயணிகளுக்குப் பாதியளவே தங்கள் நாட்டைத் திறந்து வைத்திருக்கின்றன. 2019-ல் இருந்ததைக் காட்டிலும் சர்வதேசப் பயணம் இன்னும் கடுமையானதாகவே இருக்கிறது. 2 ஆண்டுகள் அனுபவித்த அதீத அழுத்தத்துக்குப் பிறகு மருத்துவமனைகளும் சுகாதார அமைப்புகளும் மெல்ல மீள ஆரம்பித்திருக்கின்றன.
குறிப்பிட்ட சிலருக்கு கொரோனா மரணத்துக்கான பயணமாகவே அமைந்திருக்கிறது. மேலும் சிலருக்கு நீண்ட காலத்துக்கு கடுமையான சோர்வு, தசை வலி ஏற்படுகிறது. மூளை, இதயம் மற்றும் உடலுறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
எப்போதுதான் பெருந்தொற்று முடிவுக்கு வரும்?
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வரத் தாமதமாகும் என்றே கூறப்படுகிறது. வளரும் ஏழை நாடுகளில் புதிய உருமாற்ற வைரஸ் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அவர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"டெல்டா உருமாற்றம் முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒமிக்ரான் தென் ஆப்பிரிக்காவில் தோன்றியது. குறைந்த மற்றும் மத்திய தர வருமானமுள்ள நாடுகளில் அபாயகரமான திரிபுகள் இருப்பதை நாம் பார்க்கப் போகிறோம். உலகம் முழுவதற்கும் தடுப்பூசி செலுத்த நாம் மறுக்கும் வரை புதிய புதிய திரிபுகளையும் அலைகளையும் பார்ப்பது தொடரும்" என்கிறார் ஹூஸ்டன் பேய்லர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பீட்டர் ஹோட்டஸ்.
"வளரும் நாடுகளில் பெருந்தொற்று 2023-க்குள்ளும் செல்லலாம். ஆசியப் பகுதிகளில் பொது சுகாதார அதிகாரிகள் பெருந்தொற்றுக்கு முடிவு ஏற்படும் என்று சொல்வதைக் கூட விரும்பவில்லை" என்கிறார் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மையத்தின் மூத்த ஆய்வாளர் அமேஷ் அடல்ஜா.
எப்போது வரை கொரோனா திரிபுகளைச் சந்தித்து வாழ வேண்டியிருக்கும்?
இது மில்லியன் டாலர் கேள்வி என்கிறார் தென்னாப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் சிஇஓ க்லெண்டா கிரே. "அடுத்த 2 ஆண்டுகளில் கொரோனா உருமாற்றத்தைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் நீண்டகால கோவிட் பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கும். அதில் மக்கள் பாதிக்கப்படுவதையும் நாம் பார்க்க முடியும்" என்றும் கிரே தெரிவித்துள்ளார்.
பெருந்தொற்றுக்குப் பிறகான வாழ்க்கை
இன்னும் சில மாதங்களில் நிரந்தரமாக கொரோனாவுடன் எவ்வாறு வாழ வேண்டும் என்று ஒரு திட்டமிடலுக்குள் வந்திருப்போம். சில பகுதிகள் அப்படி ஒரு வைரஸ் இருந்ததையே மறந்துவிட்டுச் செயலாற்றிக் கொண்டிருக்கும். எனினும் கல்வி நிலையங்கள் விடுமுறையை அறிவிக்க ஆயத்தமாகும்போதும், அலுவலகத்தில் சில ஊழியர்களுக்குக் காய்ச்சல் என்னும்போதும் பழைய பரபரப்பு தொற்றிக் கொள்ளும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கும்.
ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி என்பது வழங்கப்படலாம். வேறு சில சூழல்கள் கூட ஏற்படலாம் என்கிறார் இவாசாகி. அவர் மேலும் கூறும்போது, "அடுத்த திரிபு அதீதப் பரவல் வேகத்துடனும் குறைவான வீரியத்தைக் கொண்டதாகவும் இருக்கலாம். அது வழக்கமான சளி, காய்ச்சலுக்கான வைரஸாக மாறலாம்.
எனினும் வைரஸ் மோசமான பாதையைத் தேர்ந்தெடுத்தால், மக்கள் கடுமையான தொற்றுக்கு ஆளாவர். எதையும் முன்கூட்டியே தீர்மானிப்பது கடினம்" என்கிறார் தொற்று நோயியல் பேராசிரியர் இவாசாகி.