கொரோனா அச்சுறுத்தல் உலகம் முழுவதும் பரவலாக நீங்கிவிட்டது என்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயலும் போதுதான், ஆஸ்திரேலியாவின் சிட்னி கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் 800 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தி மெஜஸ்டிக் பிரின்சஸ் என்ற அந்தப் கப்பல் நியூசிலாந்து நாட்டில் இருந்து சர்க்குலர் குவே துறைமுகத்திற்கு வந்தது.


இந்தக் கப்பல் நிறுத்தப்பட்டபோது 4 ஆயிரத்து 600 பயணிகள் இருந்தது. அதில் 800 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதாவது 5ல் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளாது. இந்த கப்பல் சம்பவம் 2020ல் ரூபி பிரின்சஸ் என்ற க்ரூயிஸ் கப்பலில் நடந்த சம்பவத்தை நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது. அதில் 900 பயணிகளுக்கு கொரோனா உறுதியான நிலையில் 28 பேர் உயிரிழந்தனர்.


மெஜஸ்டிக் பிரின்சஸ் :


இந்நிலையில், தி மெஜஸ்டிக் பிரின்சஸ் கப்பல் விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் க்ளார் ஓ நீல், நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத் துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அவர்கள் பயணிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து அவர்களுக்கு சிகிச்சை அளித்தல், தனிமைப்படுத்துதல் என அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் நிறுவனத்தின் தலைவர் மார்கரெட் ஃபிட்ஸ்ஜெரால்டு கூறுகையில், ஒரு பணியாளர் மூலம் பலருக்கும் தொற்று ஏற்பட்டதாகத் தெரிகிறது. கப்பலில் பின்பற்றப்பட வேண்டிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படுகின்றன என்று தெரிவித்தார்.


இன்றைய கொரோனா நிலவரம்:


தமிழகத்தில் இன்று ஆண்கள் 40, பெண்கள் 40 என மொத்தம் 80 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 16 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 93,371 ஆக அதிகரித்துள்ளது.


இந்தியாவில் புதிதாக 833 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 12 ஆயிரத்து 553 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.