உலகின் வலுவான வன விலங்குகளில் ஒன்றான சிறுத்தைகள் இயல்பில் பூனை இனத்தைச் சேர்ந்தவை என்பதாலேயோ என்னவோ, சிறுத்தைக் குட்டிகளும் நமக்கு பார்த்ததும் தூக்கி கொஞ்ச வேண்டும் என்ற உணர்வைத் தந்து வெகுவாகக் கவர்கின்றன.
மணிக்கு 80 முதல் 130 கிமீ வரை ஓடக்கூடிய இந்த அதிவேக விலங்குகள், வனத்தின் சிறந்த வேட்டைக்காரர்களாகவும் விளங்குகின்றன.
ஆனால் தங்களை வளர்க்கும் மனிதர்களுடன் நெருங்கிப் பழக கொஞ்சமும் தயங்காமல் பூனைகளைப் போலவே சிறுத்தைகளும் அன்பை வெளிப்படுத்துகின்றன.
அந்த வகையில், தனக்கு முத்தமிடும் பெண்ணிடம் தன் அன்பை வெளிப்படுத்தும் சிறுத்தை ஒன்றின் வீடியோ இணையத்தில் முன்னதாக ஹிட் அடித்துள்ளது.
சென்ற மாதமே பகிரப்பட்ட இந்த வீடியோ ரீ சர்ஃபாகி இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளைத் தாண்டி மீண்டும் ஹிட் அடித்து வருகிறது.
சிறுத்தைகள் கர்ஜிக்கும் பூனைகள் என்று அழைக்கப்பட்டாலும் அவற்றுக்கு கர்ஜிக்கத் தெரியாது.Purring எனப்படும் ஒருவகை சத்தம் எழுப்பக்கூடிய பூனையின் குணாதிசயம் சிறுத்தைகளிடமும் உள்ளது.
பூனைகள் தாங்கள் வசதியாக உணர்ந்தாலோ, உடன் இருப்பவரை தொடர்புகொள்ளவோ அல்லது தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவோ இத்தகைய ஒலியை எழுப்புகின்றன. இதே குணாதிசயத்தை சிறுத்தைகளும் கொண்டுள்ளன.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிறுத்தைகள் இந்த ஒலி எழுப்பும் வீடியோக்கள் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றன.