தெற்கு பாகிஸ்தான் பகுதியில் இன்று அதிகாலை 3 மணிக்கு 5.7 ரிக்டர் என்ற சக்திவாய்ந்த அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த துயர் சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்ததாகவும், 200 பேர் காயமடைந்ததாகவும் AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக 20 பேர் பலியானதை உறுதிபடுத்திய மாகாண உள்துறை அமைச்சர் மிர் ஜியா உல்லா லாங்கா, மீட்புப்பணிகள் துரிதபடுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மலைநகரங்களில் ஒன்றாக கருதப்படும் ஹர்னாய்-ல் இந்த நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது. நல்ல தரமான சாலைகள், மின்சாரம், போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் மீட்புப்பணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றன.
AFP செய்தி நிறுவனத்திடம் பேசிய ஹர்னாய் நகரின் பொது சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர், " நிலநடுக்கம் எற்பட்டால மின்சார வசதிகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன. மொபைல் போன் பிளாஷ் லைட் மூலம் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஏற்கனவே, மருத்துவ கட்டமைப்பு வசதி இல்லாது இருந்தது. தற்போது, நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது" என்று தெரிவித்தார்.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி மலைப்பாங்கான பகுதி என்பதால், நிலச்சரிவாலும், கட்டிட இடிபாடுகளாலும், மக்கள் இறப்பு எண்ணிக்கை பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஹர்னாய் மாவட்டத்திலிருந்து 15 கி.மீ சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளன.
பாகிஸ்தானின் மலைப்பாங்கான பகுதிகள் நிலநடுக்கும் அச்சுறுத்தம் வாய்ந்த பகுதியாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரின் தலைமையிடமான முசாஃபராபாத் நகரில் கடந்த 2005ம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், 86,000 –87,351 அளவிலான மக்கள் உயிரிழந்தனர். காயமடைந்தோர் எண்ணிக்கை 69,000 – 75,266 அளவிலும் இருந்தது. மேலும் 2.8 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தனர். ஆப்கானிஸ்தான் மற்றும் திபெத் பகுதிகளிலும் இந்நிலநடுக்கத்தின் தாக்கங்கள் உணரப்பட்டது.
இந்த வருடத்திற்குள் மேலும் 35 நிலநடுக்க ஆய்வு மையங்களும் 2026-க்குள் இன்னும் 100 நிலநடுக்க ஆய்வு மையங்களும் இந்தியாவில் அமைக்கப்படும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் முன்னதாக தெரிவித்திருந்தார்.
மேலும், வாசிக்க:
இந்தியாவில் மருத்துவப் படிப்பு வியாபாரமாகிவிட்டது.. உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?