அமெரிக்காவில் மீன் பிடிக்கச் சென்ற ஒருவரை சுறா மீன் இழுத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கையாக வாழும் உயிரினங்களை நாம் சீண்டும் பொழுது அவை திரும்பவும் தன்னை தற்காத்துக் கொள்ள மக்களை தாக்குவது வழக்கமாக நடைபெறும் ஒன்று. இதுகுறித்து எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் உயிரினங்களை துன்புறுத்தும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேசமயம் சில நேரங்களில் நாம் எதிர்பாராத சமயத்தில், எவ்வித வினைகளும் ஆற்றாதபோது உயிரினங்கள் நம்மை தாக்கும் சம்பவங்களும் நடைபெறும்.
அப்படியான ஒரு சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. பொதுவாக அமெரிக்கா போன்ற பல நாடுகளில் மீன் பிடிப்பது போன்ற செயல்களை வழக்கமான பொழுதுபோக்குகளில் ஒன்றாக குடும்பத்துடன் மக்கள் கடைபிடிக்கிறார்கள். அங்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மீன் பிடிப்பதை கற்றுக் கொடுக்கிறார்கள். இது பாரம்பரியமிக்க ஒன்றாகவும் உள்ளது.
இப்படியான நிலையில் புளோரிடா மாகாணத்தில் உள்ள எவர்க்லேட்ஸ் தேசிய பூங்காவில் மீன்பிடிக்க சென்ற ஒருவரின் கையை சுறா கடித்த சம்பவம் தொடர்பான வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், “அந்த நபர் படகின் ஓரத்தில் சாய்ந்து தனது கைகளை கழுவிக் கொண்டிருக்கிறார். அப்போது படகில் பயணித்த சக நண்பர், அவரிடம் ஆற்றில் சுறா மீன்கள் இருக்கும். கை கழுவ வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
அதை பொருட்படுத்தாமல் இரண்டாவது முறையாக அவர் தண்ணீருக்குள் கையை விடும்போது எங்கிருந்தோ பாய்ந்து வந்த சுறா ஒன்று அவரது கையை கடித்தது. மேலும், அப்படியே அந்த நபரை அது உள்ளே இழுத்து சென்றுவிட்டது. இதனை சக நண்பர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தேசிய பூங்கா அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை மீட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தான் இந்த வீடியோ பகிரப்பட்டதாகவும், எவ்வித தூண்டுதல் இல்லாத போதும் சுறாமீன் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அந்த படகில் இருந்த நண்பர் குறிப்பிட்டுள்ளார்.