உலகின் தலைசிறந்த பல்கலைக்கழங்களின் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அண்ணா பல்கலைக்கழகம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.


தனியார் நிறுவனத்தின் ஆய்வறிக்கை:


2024ம் ஆண்டில் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் எனும் தலைப்பில் Quacquarelli Symonds எனும் நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,  கல்வி நிறுவனத்தின் நற்பெயர், முதலாளியின் நற்பெயர், ஆசிரியர்களுக்கான மேற்கோள்கள், மாணவர்-ஆசிரியர் விகிதம், சர்வதேச ஆசிரியர்களின் விகிதம் மற்றும் சர்வதேச மாணவர்களின் விகிதம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில், இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் பின்னடைவை சந்தித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழம் எது?


அதன்படி, இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 172வது இடத்தில் இருந்த பாம்பே ஐஐடி நடப்பாண்டில் 149 இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்தை அந்த கல்வி நிறுவனம் பெற்றுள்ளது. அதோடு, முதல் 150 இடங்களுக்குள் இடம்பெற்ற ஒரே இந்திய பல்கலைக்கழகமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.


சரிந்த பல்கலைக்கழகங்கள்:


கடந்த முறை 174வது இடத்தில் இருந்த டெல்லி ஐஐடி இந்த முறை197வது இடத்திற்கும், 155வது இடத்தில் இருந்த பெங்களூருவில் உள்ள ஐஐஎஸ் நிறுவனம் 225 இடத்திற்கும், கரக்பூர் ஐஐடி 270வது இடத்தில் இருந்து 271வது இடத்திற்கும் பின்தங்கியுள்ளது. இதேபோன்று, கான்பூர் ஐஐடி, மெட்ராஸ் ஐஐடி, கவுகாத்தி ஐஐடி மற்றும் ரூர்கி ஐஐடி ஆகியவையும் கடந்த ஆண்டு இருந்த இடத்தில் இருந்து சரிவை சந்தித்துள்ளன.   


அண்ணா பல்கலை., அசத்தல்:


இந்த பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டில் அசுர வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்தமுறை 551 முதல் 560வது இடத்திற்கு உட்பட்ட பிரிவில் இடம்பெற்று இருந்த அண்ணா பல்கலைக்கழகம், இந்த முறை 120 இடங்கள் முன்னேற்றம் கண்டு 427வது இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் தேசிய அளவில் சிறந்த 10 பல்கலைக்கழகங்கள் எனும் பட்டியலில், அண்ணா பல்கலைக்கழகம் 10வது இடத்தை பிடித்துள்ளது.  


முக்கிய காரணம் என்ன?


ஆசிரியர்களுக்கான மேற்கோள் அளவுகோளில் அண்ணா பல்கலைக்கழகம் 99.8 மதிப்பெண்களை பெற்றதன் மூலம் இந்த அபார வளர்ச்சியை பெற்றுள்ளது. அதேநேரம், ஆசிரியர்களுக்கான மேற்கோள் அளவுகோளில் உலக அளவில் அண்ணா பல்கலைக்கழகம் 12வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கட்டணங்களை குறைத்து வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கவும், மாணவர்களுக்கு தரமான மற்றும் எதிர்காலத்திற்கான கல்வியையும் வழங்கும் நோக்கிலும் அண்ணா பல்கலைக்கழம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


12வது வருடமாக அசத்தல்:


இந்த பட்டியலில் தொடர்ந்து 12வது ஆண்டாக அமெரிக்காவை சேர்ந்த, மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் எனப்படும் எம்ஐடி பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்துள்ளது. பாடவரியாகவும் பல்கலைக்கழகங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 11 பாடங்களில் முதலிடத்தையும், 5 பாடங்களில் இரண்டாவது இடத்தையும் எம்ஐடி பலகலைக்கழகம்  தக்க வைத்துள்ளது.